மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 பாடப்பிரிவுகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும், எந்த பாடப்பிரிவையும் நிறுத்தக் கூடாது என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி, மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், எந்த பிரிவாக இருந்தாலும், அவர்களை, பொது பிரிவினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.பொது பட்டியலில் வர தகுதியில்லாத, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையே, இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும். இதில், எந்த முறைகேடும் நடக்கக் கூடாதுஎன, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், பிளஸ் 1ல், மாணவர்கள் எண்ணிக்கை குறைவு எனக்கூறி, எந்த பாடப்பிரிவையும் நிறுத்தக் கூடாது என்று, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ள உத்தரவில், 'தற்போது, பிளஸ் 1 வகுப்பில், நடைமுறையில் உள்ள, எந்த பாடப்பிரிவையும், வகுப்பையும் நிறுத்தக் கூடாது. 'முழு அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும். அதிக மாணவர்கள் இருந்தால், கூடுதலாக, ஒரு பிரிவு துவங்குவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் ஆலோசிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.