பிளஸ் 2 தேர்ச்சியில் டெல்டா மாவட்டங்கள் கடந்தாண்டைவிட நிகழாண்டு பின்னடைவைச் சந்தித்துள்ளன. டெல்டா மாவட்டங்களின் தேர்ச்சி முடிவுகளே இதற்கு ஆதாரமாக உள்ளன.


கடந்தாண்டில் மாநிலத் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருந்த திருச்சி மாவட்டமானது (95.50%) தற்போது 15ஆவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது (92.90). அதேபோல 19-ஆவது இடத்தில் இருந்த (92.49%) தஞ்சாவூர் 20-ஆவது இடத்துக்கும் (90.25%), 25 ஆவது இடத்தில் இருந்த (88.77%) திருவாரூர் 30-ஆவது இடத்துக்கும் (85.49%), 27ஆவது இடத்தில் இருந்த (88.08%), நாகப்பட்டினம் 29ஆவது இடத்துக்கும் (85.97%) 26ஆவது இடத்தில் இருந்த (88.48%), அரியலூர் 31ஆவது இடத்துக்கும் (85.38%), 21ஆவது இடத்தில் (92.16%) இருந்த புதுக்கோட்டை 22 ஆவது இடத்துக்கும் (88.53%) பின்தங்கியுள்ளது. 13 ஆவது இடத்தில் இருந்த கரூர் அதே இடத்திலும், 32ஆவது இடத்தில் இருந்த கடலூர் 28 ஆவது இடத்துக்கும் வந்துள்ளது. ஆக, டெல்டா மாவட்டங்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை.

ஆசிரியர்  பற்றாக்குறை

இதுமட்டுமன்றி ஆசிரியர்கள் பற்றாக்குறையும் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 31 சதவீத ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இதேபோல, டெல்டா மாவட்டங்களில் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி வட தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும், தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காரணம் என்ன?

டெல்டா மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் குறைய பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக ஆண்டுதோறும் பொதுத் தேர்வுக்கு தயாராகும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சாகுபடி பணிகள் நடைபெறும். டெல்டா மாவட்டங்களின் பிரதான தொழிலே விவசாயம் என்றாகிவிட்டதால் பெற்றோருக்கு துணையாக சாகுபடி பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டே தேர்வுக்கு தயாராவதில் மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது என்கின்றனர்.

வெளிநாட்டு வேலை மோகம்

மேலும், பெரும்பாலான மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் வெளிநாடுகளுக்கு சென்று ஏதாவதொரு வேலையில் சேர்ந்து குடும்பத்துக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே உள்ளனர். இதனால், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும், பெறாவிட்டாலும் வெளிநாடு என்ற மனநிலையே மாணவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.

தீர்வு என்ன ?

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியது:

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனதால் எழும் சமூகப் பொருளாதாரச் சிக்கலுக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்பதையே தேர்ச்சி விகிதம் காட்டுகிறது. 2017-18ஆம் கல்வியாண்டில் ஜூன் 1 முதல் ஏப்ரல் 30 வரை டெல்டா மாவட்டங்களில் ஆசிரியர் பணியிடமே காலியில்லை என பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்க முடியுமா?. ஏனெனில், பற்றாக்குறை இருப்பது உண்மை. ஆசிரியர்கள் பற்றாக்குறை மட்டுமின்றி அலுவலகப் பணி, ஆய்வக பயிற்றுநர், ஆய்வக உதவியாளர், கழிப்பறை பராமரிப்பு என பல்வேறு பணிகளை ஆசிரியர்களை மேற்கொள்ளும் நிலை உள்ளது.

ஆசிரியர்களை கற்றல், கற்பித்தலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பாடத் திட்டத்தில் மட்டும் மாற்றம் கொண்டுவந்தால் போதாது. அதைக் கற்பிக்க உரிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். அந்த ஆசிரியர்களையும் வகுப்பறையில் மட்டுமே பணிபுரியும் சூழலை உருவாக்க வேண்டும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்