ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு 9 பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் என்றும், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரெயில்வே பள்ளிகள் தெற்கு ரெயில்வே சார்பில் பெரம்பூர், ஜோலார்பேட்டை, அரக்கோணம், மதுரை, திருச்சி பொன்மலை, விழுப்புரம், போத்தனூர், ஈரோடு மற்றும் பாலக்காடு (கேரளா) ஆகிய 9 இடங்களில் ரெயில்வே பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர் சேர்க்கை குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் 9 ரெயில்வே பள்ளிகளையும் மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் பிபேக் தேப்ராய் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டது. பெற்றோர் அதிர்ச்சி மேலும் இந்த ரெயில்வே பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும், தற்போது படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் ரெயில்வேயின் பிற பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியானது. இது மாணவர்கள், பெற்றோர், ரெயில்வே ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அந்த தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.கண்ணையா குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் முறையீடு செய்தார்.

இதைத்தொடர்ந்து, ‘அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி தருவது அரசின் முக்கிய கடமை. கடந்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து, அவர்களது பிள்ளைகள் படிக்கும் வகையில் ரெயில்வே பள்ளிகள் இயங்குவது அவசியம்’ என்று கல்வி உரிமை சட்டம் விளக்கம் அளித்திருந்தது. சுற்றறிக்கை இதையடுத்து ரெயில்வே பள்ளிகளை மூடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக கல்வி உரிமை ஆணைய சட்ட ஆணைய நகலுடன் ரெயில்வே பொது மேலாளருக்கு என்.கண்ணையா கடிதம் அனுப்பினார். இதை பரிசீலித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், 9 ரெயில்வே பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் என்றும், புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம் சார்பில் அனைத்து கோட்ட மேலாளர்கள், முதன்மை செயலாளர்கள், ரெயில்வே பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவர் சேர்க்கை

 * விழுப்புரம், ஜோலார்பேட்டை, அரக்கோணம் ரெயில்வே பள்ளிகள் தொடர்ந்து இயங்குவது மட்டுமின்றி, 2018-19-ம் கல்வி ஆண்டில் ஆரம்ப வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். 1-ம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும்.

 * பெரம்பூர், மதுரை, பாலக்காடு, பொன்மலை, ஈரோடு, போத்தனூர் ஆகிய இடங்களில் உள்ள ரெயில்வே பள்ளிகளில் குறைந்தபட்சம் 15 முதல் 20 வரை ரெயில்வே தொழிலாளர்களின் பிள்ளைகள் இருந்தாலே, அவர்களுக்கு 1-ம்வகுப்பு சேர்க்கையில் இடம் தரலாம். இந்த பள்ளிகளில் 1-ம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புகளில் கூடுமான வரை ரெயில்வே தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி தரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ரெயில்வே பள்ளிகள் மூடப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து இயங்கும் என்ற அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.