தெற்கு ரயில்வேயில், தமிழகம் மற்றும் கேரளாவில், ஒன்பது பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 'இந்த பள்ளிகளில், 2018 - 19ல், மாணவர் சேர்க்கை நடக்காது;அடுத்த ஆண்டில் பள்ளிகள் மூடப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. 'பள்ளிகள் தொடர்ந்து இயங்க வேண்டும்' என, கல்வி உரிமை சட்ட ஆணைய நகலை காட்டி, தெற்கு ரயில்வே மஸ்துார் சங்க பொதுச் செயலர் கண்ணையா,வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், 'பள்ளிகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் சார்பில், பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:விழுப்புரம், அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில்வே பள்ளிகள் தொடர்ந்து இயங்கும். 2018 - 19ம் கல்வியாண்டில், ஆரம்ப வகுப்பு முதல், மாணவர் சேர்க்கைநடத்தலாம்.

முதல் வகுப்புக்கு மேல் படிக்க விரும்பும் மாணவர்களையும், அனுமதிக்க வேண்டும்பெரம்பூர், மதுரை, பாலக்காடு, பொன்மலை, ஈரோடு, போத்தனுார் ஆகிய இடங்களில் உள்ள ரயில்வே பள்ளிகளில், குறைந்த பட்சம், 15 முதல், 20 வரை ரயில்வே தொழிலாளர்களின் பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு, முதல் வகுப்பு சேர்க்கையில் இடம் தரலாம். முதல் வகுப்புக்கு மேலுள்ள வகுப்புகளில், ரயில்வே தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, கூடுமான வரை அனுமதி தரலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது