தமிழகத்தில் மேல்நிலை தொழிற்கல்வி மற்றும் கலை பாட பிரிவுகளில் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இதனை கடைபிடிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

1 முதல் 12ம் வகுப்பு வரையான பாட திட்டத்தை மாற்றும் பணியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பாட திட்டம் தரமானதாகவும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர கல்வி வாரியங்களின் பாட திட்டத்திற்கு மேலானதாகவும், அதே வேளையில் மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் பாடங்களில் தமிழகத்தின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும். தமிழகத்தில் 12 வகையான தொழில்கல்வி பாடங்கள் மேல்நிலை வகுப்புகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லவும், வேலைவாய்ப்பு பெறவும் வாய்ப்புகள் உள்ளன. இப்பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் வளர்ந்து வரும் தொழில்வளர்ச்சி சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்கல்விக்கான பாடங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி மற்றும் கலைபிரிவு முதன்மை பாடங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது.

பாட மாற்ற விபரங்கள்:

* கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) என்ற பாட பிரிவு மட்டும் இருந்த நிலையில் இப்பாடம் வரும் கல்வியாண்டு முதல் மூன்று வகையாக  அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) என்பது கணினி பயன்பாடுகள் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) என்ற முதன்மை பாடமாக கொண்டு வணிகவியல்- கணக்குபதிவியல்- பொருளியல், வரலாறு- புவியியல்- பொருளியல், கணக்குபதிவியலும் தணிக்கையியலும் என அறிமுகமாகிறது. வணிகவியல் பாடத்தில் டேலி முதலியனவும் இணைக்கப்படுகிறது.

* 10 தொழிற்கல்வி முதன்மை பாடங்களிலும் மூன்றாவது கருத்தியல் பாடமாக கணினி தொழில்நுட்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

* கணக்கு பதிவியலும், தணிக்கையியலும் என்ற தொழிற்கல்வி பிரிவில் முதன்மை பாடமாக கணினி பயன்பாடுகள் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

* மேல்நிலை கல்வி தொழிற்கல்வியான கணக்குபதிவியலும் தணிக்கையியலும் என்ற பிரிவில் மூன்று முதன்மை பாடங்களான வணிகவியல், கணக்குபதிவியல், கணினி பயன்பாடுகள் ஆகியவைகள் கருத்தியல் பாடமாகவும், நான்காவது முதன்மை பாடமான தணிக்கையியல் செய்முறை பாடமாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

* அலுவலக செயலாண்மை என்ற பாடப்பிரிவு அலுவலக மேலாண்மை செயலியல் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று முதன்மை பாடங்களான வணிகவியல், கணக்குபதிவியியல், அலுவலக மேலாண்மை செயலியல் ஆகியவைகள் கருத்தியல் பாடங்களாகவும், நான்காவது முதன்மை பாடமாக தட்டச்சு கணினி பயன்பாடுகளும் செய்முறை பாடமாக சேர்க்கப்படுகிறது.

* புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கணினி பயன்பாடு மற்றும் கணினி தொழில்நுட்ப பாடங்கள் கருத்தியல் மற்றும் செய்முறை தேர்வு பாடங்களாக உள்ளதால் கணினி அறிவியல் பாடத்திற்கு மதிப்பெண் வழங்குவது போன்ற நடைமுறையே இதற்கும் பின்பற்றப்படும்.

வரும் கல்வியாண்டுக்கு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறுகின்ற நிலையில் மாணவர்கள் நலன்கருதி தொழிற்கல்வி மற்றும் கலை பிரிவுகளில் மாற்றி அமைக்கப்பட்ட முதன்மை பாடவிபரங்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற கல்வித்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

கணினி தொழில்நுட்ப பாடம் இணைக்கப்பட்டு
பெயர் மாற்றப்பட்ட தொழிற்கல்வி பாடபிரிவுகள்
1. பொது இயந்திரவியல்-அடிப்படை இயந்திரவியல்
2. மின் இயந்திரங்களும் சாதனங்களும்-அடிப்படை மின் பொறியியல்
3. மின்னணு சாதனங்கள்- அடிப்படை மின்னணு பொறியியல்
4. கட்டட பட வரைவாளர்- அடிப்படை கட்டட பொறியியல்
5. ஆட்டோ மெக்கானிக்-அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல்
6. நெசவியல் தொழில்நுட்பம்- நெசவியல் தொழில்நுட்பம்
7. செவிலியம்-செவிலியம்
8. துணிகளும் ஆடைவடிவமைப்பும்-நெசவியலும் ஆடை வடிவமைப்பும்.
9. உணவு மேலாண்மையும் குழந்தை நலனும்-உணவக மேலாண்மை.
10. வேளாண்மை செயல்முறைகள்- வேளாண் அறிவியல்.