பத்தாம் வகுப்பில் பாஸ்... அடுத்து என்ன செய்யலாம்..? வழிகாட்டும் கல்வியாளர்கள்!

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 9.50 லட்சம்  பள்ளி மாணவர்களில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர். இதில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் 400 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாகப் பெற்றுள்ளனர். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் நிறைய மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் நிறைய மதிப்பெண் பெற்றிருந்தாலும் அடுத்து என்ன படிப்பது எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர்.

பத்தாம் வகுப்புக்குப் பிறகு எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பதே வாழ்க்கையைத் தீர்மானிக்க முக்கியக் காரணியாக இருப்பதால், கவனத்துடன் வாய்ப்புள்ள துறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ``பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்ல, தேர்ச்சி பெறாதவர்களும் மேற்கொண்டு படிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன" என்கிறார் கல்வியாளர் ஆயிஷா நடராசன்.

``பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மூன்று வழிகளில் மேற்படிப்பைத் தொடரலாம்" என்று சொல்லி ஒவ்வொரு வழிமுறையையும் விவரித்தார்.

``முதல் வழி: படித்து முடித்து குறுகிய காலத்தில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்கள், ஐ.டி.ஐ-கல்வி நிறுவனங்களில் சான்றிதழ் படிப்பில் சேரலாம். இங்கு ஓராண்டுப் படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பைப் பெறலாம். இதில் எலெக்ட்ரீஷியன், கம்ப்யூட்டர் மெக்கானிக், ஏ.சி மெக்கானிக் என ஏகப்பட்ட பிரிவுகள் உள்ளன. தற்போது ஐ.டி.ஐ-யில் சேர போட்டி குறைவு. மேலும், இங்கு திறன் மேம்பாட்டுக்கான ஏராளமான படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்குச்  சொந்தமாகத் தொழில் தொடங்கவும், வங்கிக் கடனுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இரண்டாவது வழி: டிப்ளோமா படிப்பில் சேர்வது. பொறியியல் கல்லூரியில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றனவோ அத்தனை படிப்புகளும் டிப்ளோமாவிலும் உண்டு. மூன்று ஆண்டுகள் டிப்ளோமா படிப்பைப் படித்து முடித்தவுடன் வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெறலாம். தமிழ்நாட்டில் நிறைய அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. இங்கு குறைந்த கட்டணத்தில் படித்து முடிக்கலாம். படிப்பை முடித்தவுடன் பொறியியல் சார்ந்த நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பைப் பெற முடியும். மூன்றாண்டு வேலை அனுபவத்துடன் பகுதி நேர பி.இ. / பி.டெக் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

மூன்றாவது வழி: டிகிரி படிக்கத் திட்டமிட்டிருக்கும் மாணவர்கள், 11-ம் வகுப்பில் சேரலாம். இந்த வழியைத்தான் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் 68 பாடங்களும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 102 பாடங்களும் இருக்கின்றன. ஆனால், ப்ளஸ் 1 சேர்பவர்கள் முக்கியப் பாடங்களைக்கொண்ட நான்கு பாடப்பிரிவுகளில்தான் அதிகளவில் சேர்கின்றனர்.

பிரிவு A - இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் என்ற பாடங்களை உள்ளடக்கியது. இந்தப் பாடங்களைப் படிப்பவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கலாம். அதிக மதிப்பெண் பெற்று பொறியியல் கல்லூரிகளில் சேரவும், ஐ.ஐ.டி-ஜே.இ.இ தேர்வு எழுதி அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் சேரவும் முடியும். மேலும், இயற்பியல், வேதியியல், கணிதப் பிரிவுகளில் பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இவர்கள் பி.காம்., எம்.காம் படிப்பில் சேர முடியாதே தவிர, 164 வகையான படிப்புகளில் சேரலாம்.

பிரிவு B - முதல் பிரிவில் உயிரியல் பாடத்துக்குப் பதிலாக இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களை எடுத்துப் படிக்கலாம். இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பாரா மருத்துவப் படிப்புகளைத் தவிர, முதல் பிரிவுக்கான அனைத்து வாய்ப்புகளையும் பெறலாம். இந்தப் பிரிவில் படிப்பவர்கள் பெரும்பாலும் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக, பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., பி.எஸ்ஸி போன்ற படிப்புகளில் சேர்கின்றனர்.

பிரிவு C - `சுட்டுப்போட்டாலும் கணக்கு வராது' என்பவர்கள், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் உயிரியல் பாடங்களைக்கொண்ட பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம். பயோகெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி போன்ற அறிவியல் பாடங்களை எடுத்துப் படிக்கலாம். பி.எஸ்ஸி படிக்கும்போது கணித துணைப்பாடம் இல்லாத பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இன்ஜினீயர் ஆக முடியாது. உயிரியல் சார்ந்த பல படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் அதிகம்.

 பிரிவு D - நான்காவது பிரிவு, வணிகவியல் பாடத்தை முதன்மையாகக்கொண்டது. இதில் ஏழு விதமான உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் முதன்மையாக, கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களை உள்ளடக்கியப் பாடப்பிரிவிலும், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளியல் மற்றும் பிசினஸ் மேத்ஸ் என்ற பிரிவிலும் சேர கடுமையான போட்டிகள் இருக்கின்றன. இதைத் தவிர, கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளியல் மற்றும் வரலாற்றுப் பாடங்களை உள்ளடக்கிய பிரிவும் உண்டு. 

வணிகவியல் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுத்துப் படிப்பவர்கள் `டேலி' (Tally) போன்ற வணிகவியல் சார்ந்த மென்பொருளைக் கற்றுக்கொண்டு வேலைவாய்ப்பைப் பெறலாம். பி.காம் படிப்பிலேயே 16-வகை பிரிவுகள் உள்ளன. இவற்றில் எதில் வேண்டுமானாலும் சேரலாம். மேலும், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ போன்ற தொழில்சார் படிப்புகளைப் படிக்கலாம்.

வரலாற்றுப் பாடத்தை உள்ளடக்கிய வணிகவியல் பிரிவில் படிப்பவர்கள், பட்டப்படிப்பில் பி.ஏ வரலாறு படித்துவிட்டு பி.எல் படிக்கச் செல்கின்றனர். ஒருசிலர், ஐ.ஏ.எஸ் தேர்வில் வரலாற்றுப் பாடத்தை முதன்மையாக எடுத்துப் படித்து வெற்றி பெறுபவர்களும் உண்டு.

மாணவர்கள், தங்களுடைய திறனுக்கும் மனநிலைக்கும் ஏற்றாற்போல படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், பெரும்பாலானோர் மதிப்பெண் அடிப்படையில் படிப்பைப் தேர்ந்தெடுக்கும் வழக்கம் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது வேலைவாய்ப்பை வழங்கும் படிப்புகளாகவும், வளர்ச்சி உள்ள துறைகளையும் மனதில்வைத்து விரும்பமுள்ள படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒருவேளை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், கவலைப்படவேண்டியதில்லை. ஐ.டி.ஐ-யில் சான்றிதழ் படிப்பில் சேர முடியும். ஆகையால், எந்தவிதமான கவலையும் வேண்டாம். தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் மாதம் இறுதியில் சிறப்புத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார் ஆயிஷா நடராசன்