மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பிளஸ்- 2 பொதுத்தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின்றன. அதன் தொடர்ச்சியாக,
மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உளவியல்ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் சிபிஎஸ்இ செய்துள்ளது.

அதன்படி, 1800 11 8004 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு உளவியல் ஆலோசனைகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் - 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது.

ஏறத்தாழ 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இம்முறை அந்தத் தேர்வுகள் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

குறிப்பாக, பிளஸ்-2 தேர்வில் பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத் தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல்கள் பரவின. பத்தாம் வகுப்பு கணித பாடத் தேர்வின்போதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன.
முதலில் அந்தக் கூற்றுகளை சிபிஎஸ்இ வாரியம் திட்டவட்டமாக மறுத்தது.
ஆனால், அதன் பின்னர், பொருளியல் மற்றும் கணித பாடத்துக்கான வினாத்தாள்கள் கசிந்ததை ஒப்புக் கொண்ட சிபிஎஸ்இ வாரியம், பொருளியல் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்தியது.

இதனிடையே, வேறு சில பாடங்களிலும் குழப்பமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இத்தகைய சூழலில், சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின்றன. c​bs‌e.‌n‌i​c.‌i‌n  அல்லது c​b‌s‌e‌r‌e‌s‌u‌l‌t‌s.‌nic.‌i‌n ஆகிய இணையப் பக்கங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.