ஜன.22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு


தமிழகத்தில் ஜன.22 முதல் நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முழுமையாகப் பங்கேற்கவுள்ளதாக சென்னையில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 பழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடு, 21 மாத நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் வரும் ஜன.22 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக முடிவெடுப்பது குறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகளின் அவசர கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் தலைமை வகித்தார்.

 இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஜாக்டோ ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 1.25 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

 மாண்டிசோரி பயிற்சி பெற்ற... நடுநிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படுவதை வரவேற்கிறோம். ஆனால் அந்த வகுப்புகளை நடத்துவதற்கு தற்போது பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை மாறுதலில் நியமிப்பதை கண்டிக்கிறோம். இதில் மாண்டிசோரி பயிற்சி முடித்த ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்றார்.

 தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் 3,500 தொடக்கப்பள்ளிகளையும் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இரவுக் காவலர் நியமனம் செய்திட வேண்டும்; பள்ளிகளுக்குத் தேவையான கழிப்பிட வசதி, தூய்மையான குடிநீர், சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்; ஆசிரியர்களின் உயர்கல்விக்கான பின்னேற்பு ஆணையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன