ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை


போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் பணியில் சேரவரும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களின் முன் அனுமதியை பெற வேண்டும். பின்னர் முதன்மை கல்வி அலுவலரால் பணியாணை வழங்கப்படும் இடத்தில் ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நாளை பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை தயாரித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.22ம் தேதிமுதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. போராட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது; 22-ம் தேதி முதல் கணக்கெடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சனி, ஞாயிற்றுகிழமையும் சம்பளம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.