இன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்க உத்தரவு


இன்று முதல் பணியில் சேருவோருக்கு, ஒழுங்கு நடவடிக்கையுடன், புதிய பணியிடம் வழங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பணியில் சேருவதற்கான கெடு, நேற்று மாலை, 7:00 மணியுடன் முடிந்தது. பெரும்பாலானோர் பணியில் சேர்ந்து விட்டனர். 

சென்னையில், சில ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை தவிர, அனைத்து ஆசிரியர்களும் பணியில் சேர்ந்துள்ளனர். வேலுாரில், 100 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.அரியலுாரில் ஒருவர்; நாமக்கல்லில் நான்கு பேர்; தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில், தலா ஐந்து பேர் மட்டும் வேலைக்கு வரவில்லை என, அதிகாரிகள் கூறினர். வேலைக்கு சேர்ந்தவர்கள் மற்றும் சேராதவர்களின் எண்ணிக்கை விபரம், இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், அரசின் பலகட்ட அவகாசத்தையும் மீறி, பணிக்கு திரும்பாமல், போராட்டத்துக்கு சென்றவர்கள் மீது, அரசு விதிகள், '17 - பி' பிரிவிலான நடவடிக்கை, இன்று துவங்க உள்ளது.இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் நேற்றிரவு அனுப்பிய சுற்றறிக்கை:பள்ளி கல்வித்துறை அவகாசத்தை தொடர்ந்து, அதிக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். இன்னும் சேராதவர்கள் மீது, அரசு விதிகள், '17 - பி' பிரிவின்படி, 'மெமோ' வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில், பணிக்கு வராதோர் மீது, நியமன அலுவலரான பள்ளி தாளாளர் அல்லது செயலர், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபரத்தை, பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.அரசு பள்ளிகளில், இன்று முதல் சேர வரும் ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளின் முன் அனுமதியை பெற்ற பிறகே, பணியில் சேர அனுமதிக்கப்படுவர். இந்த அனுமதியின் போது, அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் சேர முடியாது. பொதுமக்களின் எதிர்ப்புகளை தவிர்க்கும் பொருட்டும், ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதியும், அவர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரியால், வேறு இடத்தில் பணி ஆணை வழங்கப்படும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.