கல்வி தொலைக்காட்சி சேனல்: ஒளிபரப்பு ஏற்பாடுகள் தீவிரம்தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. இதற்காக, 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் 24 மணி நேர புதிய சேனல் தொடங்கப்படவுள்ளது. இதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் 8-ஆவது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் ரூ. ஒரு கோடி மதிப்பில் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப்யாதவ், இயக்குநர் ராமேஸ்வர முருகன் ஆகியோரது மேற்பார்வையில், கல்வித் துறை இணை இயக்குநர்கள் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிகழ்ச்சி நிரல்கள்: இந்த தொலைக்காட்சியில் 24 மணி நேரமும், கல்வித் தொடர்பான தகவல்கள் மாணவர்களைச் சென்றடையும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இதற்கான நிகழ்ச்சி நிரல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்க உரையும், அனிமேஷன் விளக்கமும் இடம்பெறும். காலை 5.30 மணிக்கு நாள் குறிப்பு என்ற தலைப்பில் அன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்து விளக்கப்படும். இந்த நாள் இனிய நாள் என்ற தலைப்பில் உலக நிகழ்வுகள், செய்தித் தொகுப்புகள், அந்த நாளின் முக்கிய நிகழ்வுகள் கொண்டு சேர்க்கப்படும். காலை 5.30 முதல் 6 மணி வரை நலமே வளம் என்ற தலைப்பில் உடற்பயிற்சி, யோகா செயல் விளக்கம், ஆரோக்கியம் குறித்த விளக்க உரை, உணவு முறை, எளிய மருத்துவம் குறித்து விளக்கப்படும். 6 முதல் 6.30 மணி வரை குருவே துணை என்ற நிகழ்ச்சி மூலம் சாதனை படைத்த ஆசிரியர்கள் குறித்த விளக்கப் படம், அவர்களது சாதனைப் பேட்டிகள், கல்வியாளர்களின் கருத்துகளும் இடம்பெறும். 

காலை 6.30 முதல் 7 மணி வரை சுட்டி கெட்டி என்ற நிகழ்ச்சியில் சாதனை மாணவர்கள், அவர்களது கண்டுபிடிப்புகள் இடம்பெறும். தொடர்ந்து, வல்லது அரசு என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக அரசின் கல்வித் துறையின் செயல்பாடுகள், அறிவிப்புகள், பேட்டிகள், கல்வித் துறை மானியங்கள், நலத் திட்டங்கள், அரசின் சாதனை விளக்கங்கள் இடம் பெறும். ஒழுக்கம் விழுப்பம் தரும் என்ற நிகழ்ச்சியில் நல்லொழுக்கக் கதைகள், மாணவர்களின் குறு நாடகங்கள், வாழ்வியல் உரைகள் இடம்பெறும். 

மணியோசை என்ற நிகழ்ச்சி மூலம் சிறந்த பள்ளியின் செயல்பாடுகள் குறித்த சிறப்புப் பார்வை, கட்டமைப்பு வசதிகள், சாதனைகள் குறித்து விளக்கப்படும். தாயே தமிழ் நிகழ்ச்சி மூலம் தமிழ்ப் பாடங்கள், பாடல்கள், தமிழறிஞர்களின் உரைகள் இடம்பெறும். ஈசி இங்கிலீஷ் என்ற நிகழ்ச்சி மூலம் ஆங்கில இலக்கியம், ஆங்கிலம் பேசும் பயிற்சிகள், ஆங்கில அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறும். அறிவோம் அறிவியல் என்ற நிகழ்ச்சி மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் பாடங்கள், செய்முறை விளக்கங்கள் இடம்பெறும். சுவடுகள் நிகழ்ச்சியில் பழைய வரலாற்றுப் பின்னணிகள், புவியியல் பாடங்கள், பொது அறிவு நிகழ்ச்சிகள் இடம்பெறும். முக்கிய நிகழ்வாக பகல் 11.30 முதல் 12 மணி வரை ஏணிப்படிகள் என்ற நிகழ்ச்சி மூலம் போட்டித் தேர்வுகளுக்கு கற்றல், நீட், ஜேஇஇ, சி.ஏ, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டிகள், பயிற்சி வகுப்புகள் நேரடியாக வழங்கப்படுகின்றன. ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சி மூலம் குழு விளையாட்டுகள், விளையாட்டில் சாதித்த மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சாதனைகள் குறித்து விளக்கப்படும். இவ்வாறு, பகல் ஒரு மணி வரை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படவுள்ளன. 

மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்: இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் மீடியா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு எஸ்.மேரிஜூலியன், கள்ளக்குறிச்சிக்கு நீதிதாஸ் ஆகிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புகைப்படக்காரர்களுடன் சென்று மாவட்டத்தில் உள்ள கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை காட்சி பதிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக சாதனைப் பள்ளிகள், கட்டமைப்புகள், கல்வி அமைச்சர்களின் பேட்டிகள் போன்றவற்றை பதிவு செய்து, நிகழ்ச்சிகளை தயாரித்து வருகின்றனர். இவ்வாறு, 32 மாவட்டங்களிலும் கல்வி தொலைக்காட்சியின் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு காட்சிப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இவை சென்னை காட்சி பதிவு மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, விரைவில் ஒளிபரப்பு தொடங்க உள்ளது. 

இந்தத் தொலைக்காட்சி ஆரம்பப் பள்ளி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ளத் தகவலை வழங்கும். பாடத் திட்டங்களுக்குள்தான் பயிற்சிகள் வழங்கப்படும். பள்ளிகளில் தொலைக்காட்சிகள்: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர். மீண்டும், மாலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால் வீட்டில் சென்றும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்த்து பயன்பெற முடியும். இது, இந்திய அளவில் கல்வித் துறையின் முன்னோடி திட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் கல்வியாளர்கள்.