மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கும் நிலையில், தேர்வுக்கான முன் னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தின்கீழ் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே மாணவர்கள் உயர்நிலை படிப்புகளுக்கு தயாராக ஏதுவாக பொதுத்தேர்வை நடப்பு கல்வியாண்டு முதல் முன்கூட்டியே நடத்தி முடிக்க முடிவு செய் துள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வு மார்ச் 1-ல் தொடங்கி மார்ச் 19-ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 14 முதல் மார்ச் 29-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன. தேர்வு மையங்கள் விரைவில் தேர்வு தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ள 3,400 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கும் பணி முடிந்துவிட்டன. தொடர்ந்து தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பட்டியல் தயாரிக்கும் பணி இந்த விடைத்தாள்களை தேர்வு மையங்களில் பாதுகாப்பாக வைக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அந்தந்த மையப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர விடைத்தாள் திருத்துதல் ஆசிரியர் பட்டியல் தயாரிக்கும் பணியும் தொடங்கியுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.