பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில் 37 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடக்கிறது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 20 லட்சம் மாணவ மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட வகுப்புகளுக்கு அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தற்போது நடக்கிறது. இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இந்த செய்முறைத் தேர்வில் தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டுகட்டமாக செய்முறைத் தேர்வுகள் நடக்க உள்ளன. முதற்கட்ட தேர்வில் 149 பள்ளிகளிலும் இரண்டாம் கட்ட தேர்வில் 157 பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வு நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொத்தம் 47 ஆயிரத்து 305 பேர் படிக்கின்றனர். அவர்களில் 37 ஆயிரத்து 299 பேர் செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர்.