பிளஸ் 2 புத்தகம் தாமதமாகும்? : புதிய பாடத்திட்ட பணிகளில் சுணக்கம்
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பணிகளில், திடீர் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், வரும் கல்வி ஆண்டுக்குள், புதிய பாடத்திட்ட புத்தகம் தயாராகுமா என, ஆசிரியர்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.முதலில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகமானது. இரண்டு, நான்கு, ஐந்து, எட்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டம் அறிமுகமாக உள்ளது.கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர், அறிவொளி, இணை இயக்குனர்கள், பொன்.குமார், உமா, பாலமுருகன் ஆகியோர் இடம் பெற்ற குழுவினர், இந்த பணிகளை கவனித்து வந்தனர். ஆனால், அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, முறைகேடு புகார்கள் போன்றவற்றால், புதிய பாடத்திட்ட பணிகளில், இரண்டு மாதமாக, சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.இதன் உச்சகட்டமாக, கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர், அறிவொளி, டி.ஆர்.பி., உறுப்பினராக மாற்றப்பட்டார். சமீபத்தில், பதவி உயர்வு பெற்ற, டி.ஆர்.பி.,உறுப்பினர், உஷா ராணி, புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய நிலையில், புதிய பாடத்திட்டத்தில், பாட புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு, ஆய்வில் உள்ளன. அவற்றை இறுதி செய்து, புத்தகங்கள் அச்சிட அனுப்ப வேண்டும்.ஆனால், திடீரென இயக்குனர் மாற்றப்பட்டதால், புதிய இயக்குனர், பாடத்திட்டத்தை அறிந்து, பணிகளை துரிதப்படுத்த, காலதாமதம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.குறிப்பாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச்சில், புதிய பாடத்திட்ட புத்தகங்களை அறிமுகம் செய்தால் தான், பாடங்களை விரைந்து நடத்த முடியும். மேலும், நீட், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டிய நிலையும் உள்ளது.எனவே, வரும் ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழக பள்ளி கல்வித் துறை, கூடுதல் அதிகாரிகளை நியமித்து, புதிய பாடத்திட்ட பணிகளை விரைந்து முடிப்பது அவசியம்.
0 Comments