ஒரே நாளில் செய்முறை, திருப்புதல் தேர்வு மன உளைச்சலில் பிளஸ் 2 மாணவர்கள்செய்முறை மற்றும் திருப்புதல் தேர்வுகள் ஒரே நேரத்தில் துவங்குவதால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, முதல் திருப்புதல் தேர்வு ஜன., மாதம் நடந்தது. பொதுத்தேர்வுகளுக்கு, முன்பு, இரண்டு திருப்புதல் தேர்வுகளை கட்டாயம் நடத்தும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. முதல் திருப்புதல் தேர்வுக்கு பின்னர், ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தது. இதனால், இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்த தாமதமானது. தற்போது, செய் முறைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் தேர்வுகள் துவங்குகிறது. முதற்கட்ட செய்முறைத்தேர்வுகள் இன்று முதல், 13ம்தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வுகள், 14 முதல் 22ம்தேதி வரையும் நடக்கிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வுகளும் நாளை முதல் துவங்குகிறது. செய்முறைத் தேர்வு இரண்டாம் கட்டமாக நடக்கும் பள்ளிகளுக்கு, திருப்புதல் தேர்வை எதிர்கொள்வதற்கு பிரச்னை இல்லை.

முதற்கட்ட செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்கள், ஒரே நாளில் திருப்புதல் தேர்வையும் எதிர்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். பொதுத்தேர்வு நெருங்கும் இந்நேரத்தில், தேர்வுகளால் மாணவர்கள் இவ்வாறு மனஉளைச்சலுக்கு தள்ளப்படுவதற்கு, கல்வித்துறையும் கண்டுகொள்ளாமல், தேர்வுகளை நடத்தி முடிப்பதில் மட்டு மே குறிக்கோளாக உள்ளது.

செய்முறைத்தேர்வுகளுக்கு பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால், திருப்புதல் தேர்வுகள் பெயரளவில் மட்டுமே நடத்தப்படும்.

காலையில் செய்முறைத்தேர்வுகள் உள்ள மாணவர்கள் மாலையில் திருப்புதல் தேர்வும், மதியம் செய்முறைத்தேர்வு உள்ளவர்கள், காலையில் திருப்புதல் எழுதுவது என நிலையான அட்டவணை இல்லாமல், மாணவர்களை மனதளவில் பாதிக்கும்படி இத்தேர்வு நடத்தப்படுகிறது.