தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிவரும் கல்வி ஆண்டு 8, 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் மடி கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நெல்லையில் அளித்த பேட்டி: இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக 16 ஆயிரம் மாணவர்களுக்கு அரசு மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

இதில் அதிக மதிப்பெண் பெறும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தனியாக 25 நாட்கள் பல்வேறு கல்லூரிகளில் முழுமையான பயிற்சி தரப்படும். ஜிஎஸ்டிக்கு நாம் 4ல் ஒரு பங்கு வரி செலுத்தவேண்டி உள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 2 லட்சத்து 85 ஆயிரம் ஆடிட்டர்கள் உள்ளனர். ஜிஎஸ்டி வரி வந்துள்ளதால் அவர்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வணிகவியல் படித்த 3 ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு புதிய ஆடிட்டர்கள் உருவாக்கப்படுவர்.

வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டு கல்வி முறை கொண்டு வரப்படும். மேலும் இந்த ஆண்டு 1 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு வண்ண சீருடை வழங்கப்படும். பிளஸ்-1. பிளஸ்-2 மாணவர்கள் 15 லட்சம் பேருக்கு இதுவரை லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 8, 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் மடி கணினி வழங்கப்படும். கடந்த ஆண்டு 250 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தேவையான சென்டர்கள் இல்லாததால் வெளி மாநிலங்களுக்கு சென்று மாணவர்கள் எழுதினர்.

இந்த ஆண்டு 550 மையங்கள் உருவாக்கப்படும். தமிழக மாணவர்கள் இனி வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.