தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!


2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை தொடங்கியது. 2019-20ம் ஆண்டின் பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் திருப்பூர் வடக்கு தொகுதி MLA விஜயகுமார் எழுப்பிய கேள்விக்கு உயர் கல்விதுறை அமைச்சர் அன்பழகன் பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அமைச்ர் உயர் கல்வியில் 1,585 புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் திருப்பூர் வடக்கு பகுதியில் புதிய அரசு மகளிர் கல்லூரி உருவாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்றார். இந்த ஆட்சியில் 65 புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக  உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

முன்னதாக ட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ஆசிரியர்  காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்  என தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.

கூட்டம் துவங்கிய போது ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று திமுக கூறியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றார் தங்கம் தென்னரசு.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என்றார். மேற்குவங்கம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் புதிய பென்சன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். புதிய பென்சன் திட்டத்திற்கு ஒப்பு கொண்டு தான் புதிய ஊழியர்கள் பணிக்கு சேர்ந்ததாக குறிப்பிட்டார்.