பொதுத்தேர்வு விடைத்தாள் அனுப்பும் பணி துவக்கம்


பொதுத்தேர்வு  துவங்க, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்வு மையங்களுக்கு, வெற்று விடைத்தாள்களை அனுப்பும் பணி துவங்கியுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு, தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 1; பிளஸ் 1 தேர்வு, மார்ச், 6; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 14ல், துவங்க உள்ளது. அனைத்து தேர்வுகளும், மார்ச், 19ல் முடிவடைகின்றன.தேர்வுக்கான ஆயத்த பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. மாநிலம் முழுவதும், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ள, 3,000 பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. 

தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பு மற்றும் இதர ஊழியர்களை நியமிக்கும் பணியும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.இந்நிலையில், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான, முதன்மை வெற்று விடைத்தாள்கள் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. மாவட்ட தலைநகருக்கு, ஏற்கனவே விடைத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து, நேற்று முதல், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த விடைத்தாள்களை, தேர்வு மையங்களில் உள்ள கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்குமாறும், வேறு யாருக்கும் விடை தாள், 'லீக்' ஆகாமல் பாதுகாக்கும்படியும், பள்ளி தலைமை ஆசிரியர்களை, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.