அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் பதிவேட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்


கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
 வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே நாதிபாளையத்தில் ₹13.20 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குடன் கூடிய வணிகவளாகம் அமைப்பதற்கான துவக்க விழா நேற்று  நடந்தது. விழாவை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

 பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

 பள்ளி கல்வித்துறையை பொருத்தவரை ₹2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 25 ஆயிரம் பள்ளிகளில் அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்களை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதன்மூலம் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தொழில்நுட்பங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.

பள்ளிகளில் 3ம் பருவத்திற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டது.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முதல்வர் விரைவில் துவக்கி  வைப்பார்.

அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் பதிவேட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க முடியும். 12ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்பட்டதன் மூலம் பிளஸ் 2 படித்தாலே வேலைவாய்ப்பு என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.