பள்ளிகளில் 'மூலிகை பூங்கா' : வனத்துறையினர் ஏற்பாடு


மாவட்டத்திற்கு 10 பள்ளிகளில் மூலிகை பூங்கா அமைக்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.மூலிகை வளர்ப்பால் சுற்றுச்சூழலும் இயற்கையும் பாதுகாக்கப்படுகிறது. நம் வீட்டிற்கு அருகே இருக்கும் செடிகள் கூட 
மூலிகைகள் தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை. மூலிகையின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், மூலிகை வளர்ப்பை ஊக்குவிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.வனத்துறையால் அழிந்து வரும் மூலிகைச் செடிகள், மரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மூலிகைகள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றை பாதுகாக்க பள்ளிகளில் மூலிகை பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.20 வகை மூலிகைகள்மாவட்டத்திற்கு 10 பள்ளிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். தேர்வாகும் பள்ளிகளில் வன விரிவாக்க மையம் சார்பில் காட்டுமல்லி, காட்டு இஞ்சி, கருநொச்சி, பிரம்பு, முருங்கை, வேம்பு, கற்றாழை, கீழா நெல்லி உட்பட 20 க்கும் மேற்பட்ட மூலிகை செடி, மரங்கள் நடவு செய்யப்படும். தாவரப்பெயர், குணங்கள், நோய் முறிவு தன்மை குறித்து விழிப்புணர்வு பலகை செடிகளுக்கு அருகில் வைக்கப்படும். அந்தந்த பள்ளிகளே மூலிகை பூங்காவை பராமரிக்க வேண்டும் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.