அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர் துவக்கி வைத்தார்!சென்னை அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். திருவான்மியூர் அரசுப்பள்ளியில் இந்த திட்டத்தை ஆளுநர் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சி இணைந்து இந்த காலை உணவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததது. 

இதனையடுத்து சென்னையில் அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சென்னை மாநகராட்சி இணைந்து காலை உணவை வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிகழச்சியின் போது பேசிய ஆளுநர் பன்வாரிலால், மதிய உணவு வழங்கும் திட்டத்தையும், அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனத்திடம் வழங்க அமைச்சரவை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மதிய உணவு திட்டம் தொடங்கி  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து கல்வி விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.