அரசு பள்ளிகளில், 'கணினி பயிற்றுனர்' ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை மாற்றியது தமிழக அரசு

அரசு பள்ளிகளில், 'கணினி பயிற்றுனர்' ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை மாற்றி, தமிழக அரசு, புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்த, பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். அத்துடன், ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்' தேர்ச்சி கட்டாயமாகும்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி அவசியம் இல்லை. ஆனால், முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும்.தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், 1998ல், அறிமுகம் செய்யப்பட்ட, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற, கணினி அறிவியல் படிப்புக்கு, முதலில், கம்ப்யூட்டர் டிப்ளமா முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.பின், பி.எஸ்சி., கம்ப்யூட்டர்சயின்ஸ் மற்றும் பி.எட்., முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின், புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

அதேநேரத்தில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள், 'டெட்' தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப் படிப்புமுடித்தவர்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய அரசாணையை, தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் விதிகளின் படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான, ஆசிரியர் பணிக்கு, முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.அரசு பள்ளிகளில், 2,689 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களில், 814 இடங்கள் காலியாக உள்ளன.

அவை, புதிய கல்வித்தகுதி அடிப்படையில், 'கம்ப்யூட்டர் பயிற்றுனர், கிரேடு -1' என்ற பதவியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. தற்போது பணியாற்றுவோர், 'கம்ப்யூட்டர் பயிற்றுனர், கிரேடு- 2' என, அழைக்கப்படுவர்.கிரேடு - 2 பதவியில் உள்ளவர்கள், குறைந்த பட்சம், எட்டு ஆண்டுகள் அனுபவத்துடன், முதுநிலை கல்வித்தகுதி பெற்றிருந்தால், எதிர்காலத்தில், கிரேடு -1 நிலைக்கு பதவி உயர்வு பெறுவர். அதேபோல, கிரேடு - 2ல் பணியாற்றுவோரின் பணியிடங்கள், ஓய்வு, மரணம் உள்ளிட்ட, காரணங்களால் காலியானால், அந்த இடம், கிரேடு - 1 ஆக தரம் உயர்த்தப்படும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.