மாணவர் வாழ்வில் வெற்றிடம் - கட்டுரை


 இயந்திர வாழ்வில் தனது தேவைகளை பூர்த்தி செய்த கொள்ள அலைந்து கொண்டிருக்கும் மனிதன் வாழ்வில் கண்டுகொள்ளப்படாத எதிர்கால கேள்வியை நோக்கிய ஒரு மீள் பார்வை.

ஆயிரம் இளைஞர்களை கொடுங்கள் இந்திய பாரதத்தை வல்லரசாக்குவேன் என்ற விவேகானந்தரின் பொன்மொழிகளையும், இளைஞர்கள் தான் எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்ற கனவு நாயகனின் கூற்றுகள் அனைத்தும் சிதைந்து கொண்டிருப்பதை கண்கள் காண மறுப்தை நெஞ்சம் நினைக்கட்டும்.
எண்ணிலடங்கா மாணவர்களின் தற்கொலை முயற்சியும், தேர்வு தோல்வி பயமும். பருவ மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளையும், எதிர்கால வாழ்வை எதிர்கொள்ளத் துணிவில்லாத மாணாக்கரின் எழுதபடாத வாசகமாக மாறிப்போனது "தற்கொலை".

இன்றைய கல்வி முறைகள் மாணவர்களின் அறிவுத்திறனை பெருக்கவும், பெற்றோரின் தன்மானத்தை காட்டவும், பள்ளிகளின் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் மட்டுமே மாணவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களே தவிர இன்றைய கல்வி முறைகள் மாணவர்களின் வாழ்கை தரத்தை வழிவகுத்து அவர்கள் மனதில் ஊன்றுகோலாக வாழ்க்கை கல்வியையோ அல்லது நன்னெறி கோட்பாடுகளையோ கற்பிக்க இன்றைய சமூகமோ, சூழ்நிலைகளோ மறுக்கின்றன. மாறாக மாணவர்கள் வாழ்வில் போராட்ட குணங்களையும், போட்டி மனப்பான்மையும் உருவாக்குவதன் விளைவே இக்கால இளைஞர்கள் பலரது வாழ்வானது எண்ணிய சில வருடங்களில் முடிவுறுகிறது.

பள்ளி மாணவர்களிடையே வாழ்க்கைக்கு அடிப்படையான கல்வி முறைகளையும் தோல்வி குறித்த ஊக்குவிப்பையும் நடைமுறைப்படுத்த தவறிக்கொண்டிருகிறோம். இதன் விளைவே தமிழகத்தில் பல மாணவர்கள் செய்திதாள்களில் தலையங்கமாகிப் போகின்றனர்.
நாகரிக வளர்ச்சியில் உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அந்த அபரிமிதமான வளர்ச்சியே அழிவையும் தேடித்தந்து விடுகிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது.

முந்தைய கல்வி முறைகளையும், இன்றைய கல்வி முறைகளின் அடிப்படையில்  மாணவர்களின் மன நிலையை ஒப்பிட்டு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில் தற்கொலை என்ற ஒன்று மாணவர் வாழ்வில் இடம் பெறாத ஒன்றாகும்.

வியத்தகு தொழில்நுட்ப வளர்ச்சிதான் இன்றைய இளம் சமூகத்தின் சீர்கேடு. சமூக வலைதலங்கள் யாவும் நாடி நரம்புகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்நாளில் அவை இளைஞர்களின் வளர்ச்சியில் எவ்வித பங்காற்றுகின்றன என்பதை உற்றுப் பார்த்தால் சற்றே ஏமாற்றம் தான்.
பல விதமான சௌகரியங்கள், கால விரையம் போன்ற உபயோகமான அமைப்புகளை கொண்டிருப்பினும் அதன் பலன்கள் சொற்பமே. அழிவை தேடியே இளைய சமூகம் ஓடிக்கொண்டிருப்பதை அனைவரும் அறிந்ததே.
பெற்றோர்களின் அன்புப் பரிசாக இடம் பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப பொருட்கள் தான் அவர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளின் பதின்ம வயது எதிரி என்பதை நினைவில் வையுங்கள்.

முகப்புத்தகம்(facebook), புலனம்(Whatsapp),வலைதளங்கள், போன்றவை பசியாற்றும் தாய்மார்களாகி விட்டன இன்றைய இளம் தலைமுறைக்கு.
ஓர் செம்மறியாட்டு வாழ்கை வாழக் கற்றுக் கொண்டிருக்கும் பள்ளி, கல்லூரி இளைஞர்கள் யாவரும் அவர்தம் திறமைகளை கண்டறிந்து வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முற்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
பள்ளிகளும், கல்லூரிகளும், இளம் தலைமுறையை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன. அவை யாவும் இளம் தலைமுறையை மனதளவிலும், உடலளிவிலும், அவர்களின் திறமைகளையும், திறன்களையும் ஊக்குவித்து எதிர்கால தலைமுறையை உருவாக்க வழிவகுக்க வேண்டும் என்பதே உன்னத நோக்கமாகும்.

செம்மறியாட்டு வாழ்க்கை
வாழாதே மாணவனே
செங்குருதி மண்ணில்
பிறந்தவன் நீ!
தோல்விகள் தொடர்வண்டி
பெட்டிகளாய் உன் முதுகில்
தொலைதூரம் தூக்கிச்செல்ல
ஆசைப்பட்டு விடாதே!
வையகம் யாவும் ஆளும்
தகுதி உன் எல்லை
வயல் வரப்புகளோடு வடிகட்டி
அணை கட்டிடாதே!
சாதிய சமூக சேற்றுக்குள்
களையெடுக்க கால் ஊன்று
சீர்கேடுகளை சிக்கெடுக்க
சிறகுகள் முளைக்கப் பெறுவாய்!
பட்டம் பெற்றும் பயனில்லை
பாடப் புத்தகம் போதாது
பகுத்தறிவு பக்ககங்களை
புரட்டிப்பார் புத்துணர்ச்சி கொள்வாய்!
வியர்வை துளிகள் மண்ணில்
விழுந்துவிட்டால் உன் தோள்கள்
வேர்பிடித்து விண்ணைத் தொட
கைகள் நீட்டிட வாடா மன்னவனே!
                           

ரா.அன்பரசு.M.A.,B.Ed., ஆங்கில ஆசிரியர்,
கிட்ஸ் பார்க் மெட்ரிக் பள்ளி,
கிணத்துக்கடவு, கோவை.