தினமும் மனு: ஆசிரியர்கள் முடிவு


பகுதி நேர ஆசிரியர்கள், முழு நேர வேலை கோரி, முதல்வர் அலுவலகத்திற்கு, சட்டசபைமுடியும் வரை, தினமும் மனு அனுப்ப, முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், 2012ல், உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், தோட்டக்கலை, இசை, தையல், கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்றவற்றை கற்பிப்பதற்காக, 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்; இவர்கள், தொகுப்பூதியமாக, 7,700 ரூபாய் பெற்று வருகின்றனர்.

'தங்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; முழு நேர ஆசிரியர்களாக நியமித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என, எதிர்பார்த்தனர்.ஆனால், எந்த அறிவிப்பும் வெளியாகாததால், பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

எனவே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை, தினமும் முதல்வர் தனிப்பிரிவுக்கு, பதிவு தபால், பேக்ஸ், இ - மெயில் வாயிலாக, கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.