பொதுத் தேர்வு: தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கட்டுப்பாடுகள்பொதுத் தேர்வுப் பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்ய தேர்வுத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1,  பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தேர்வினை நடத்துவது குறித்து அரசுத் தேர்வுத்துறை ஆண்டுதோறும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குவது வழக்கம். அரசுப் பொதுத் தேர்வு நடைபெறும் மையத்தில், அந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்க கூடாது என்பது தேர்வுத்துறையின் விதியாக உள்ளது. ஆனால், அதையும் மீறி அங்கு நியமிக்கப்படும், முதன்மை கண்காணிப்பாளர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளின் துணையுடன் சிலப் பள்ளிகள் விதிமீறல்களில் ஈடுபடுகின்றன.கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின்போது தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் தேர்வுப் பணியில் ஈடுப்பட்டிருந்தார். ஆனால் அவர் மீது துறைரீதியாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதுபோன்று நடைபெறும் தவறுகளை தடுக்கும் வகையில் அரசுத் தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கையை இந்த ஆண்டு எடுத்துள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பொதுத் தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியது: அரசுப் பொதுத்தேர்வுகளை எவ்வித சர்ச்சையும் இல்லாமல்  மாவட்ட அளவில் நடத்திடும் முழுப்பொறுப்பும் மாவட்ட ஆய்வு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்தில் பிளஸ் 1,  பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரு முதன்மைக் கண்காணிப்பாளரையும்,  பத்தாம் வகுப்புக்கு ஒரு முதன்மைக் கண்காணிப்பாளரையும் நியமனம் செய்ய வேண்டும்.  அதேபோல் ஒரு தேர்வு மையத்தில் நியமனம்செய்யப்படும் முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலர்களும் வெவ்வேறுப் பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.  கடந்த ஆண்டு தேர்வுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவருக்கு இந்த ஆண்டும், அதே பள்ளியை ஒதுக்கீடு செய்யக்கூடாது.  கடந்த கல்வி ஆண்டு வரை இந்தப் பணியில், தனியார் பள்ளியில் சிறப்பாக செயல்படும்முதல்வர்களையும் நியமனம் செய்தோம். ஆனால் அவர்கள் தவறுகள் செய்யும் போது துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. எனவே இந்த ஆண்டு முதல் முதன்மைக் கண்காணிப்பாளர் பணியில் அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளியில் பணியாற்றும்தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அறிவுரைவழங்கி உள்ளோம்.

மேலும் கூடுதலாக தேவைப்பட்டால் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம் என அறிவுரை வழங்கி உள்ளோம்.  இதனால் மாணவர்கள் தேர்வு முடிந்த பின்னர் அவர்களின் விடைத்தாளில் ஏதாவது தவறுகள் நடந்தால் அந்த தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இருப்பினும் தவிர்க்க முடியாத சூழல்களிலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கிடைக்காத நேரங்களிலும் தனியார் பள்ளி முதல்வர்களைப் பயன்படுத்தலாம் என அவர்கள் தெரிவித்தனர்.