உலகிலேயே அதிக நேரம் பணியாற்றி குறைந்த சம்பளம் பெறுவோர் இந்தியர்களே: என்எஸ்எஸ்ஓ சர்வேயில் தகவல்

புதுடெல்லி: உலகிலேயே அதிக நேரம் பணியாற்றுவோர் இந்தியர்கள் என்று தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.

என்எஸ்எஸ்ஓ நடத்திய சர்வேயின் விவரம் வருமாறு:
கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களுக்கிடையே மேற்கொண்ட சர்வேயின்படி, இந்தியாவில் நகர்ப்புறத்தில் வாரம் ஒன்றுக்கு குறைந்தது 53 மணி நேரமும், கிராமப் புறங்களில் வாரம் ஒன்றுக்கு 46 மணி நேரமும் பணியாற்றுகின்றனர் என்று தெரியவந்தது.
இது வேலை நேரத்தை மதிப்பிடும் முதல் அதிகாரப்பூர்வ சர்வேயாகும். கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

நகர்ப்புற ஆண்கள் வாரந்தோறும் 60 மணியிருந்து 84 மணி நேரம் வரை பணியாற்றுகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு வகுத்துள்ள நேரத்தை விட 48 மணி நேரம் அதிகமாக பெரும்பாலான இந்திய தொழிலாளர்கள் வாரந்தோறும் பணியாற்றுகின்றனர்.

2018-ம் ஆண்டு ஆசிய பசிபிக் வேலைவாய்ப்பு மற்றும் சோஷியல் அவுட்லுக் நடத்திய ஆய்வில், தெற்கு ஆசியாவில் குறைந்த நேரம் பணியாற்றும் தொழிலாளர்களும், கிழக்கு ஆசியாவில் அதிக நேரம் பணியாற்றும் தொழிலாளர்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

உலக அளவில் வாரந்தோறும் 43 மணி நேரம் பணியாற்ற வரையறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவில் 48 மணி நேரத்துக்கு அதிகமாகவே பணியாற்றுகின்றனர்.

அதிக நேரம் பணியாற்றினாலும், சம்பளமும் குறைவாகவே உள்ளது. 1948 இந்திய தொழிற்சாலை சட்டப்படி, வாரம் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை தரவேண்டும்.
அதற்குமேல் கூடுதல் சம்பளம் தரவேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.