கணிதத்தில் நேரடி கேள்விகள்: சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மகிழ்ச்சி



சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், பத்தாம் வகுப்புக்கான கணித வினாத்தாளில், புத்தகத்தில் உள்ள நேரடி வினாக்கள் இடம் பெற்றதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், நேற்று, பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்துக்கு தேர்வு நடந்தது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் வழக்கமாக, கணித வினாத்தாள்கள் கடினமாக இருக்கும். பெரும்பாலும் புத்தகத்தின் உள் பகுதிகளில் இருந்து, அதிக கேள்விகள் இடம் பெறும்.

இந்தாண்டு தேர்வு எப்படி இருக்குமோ என, மாணவர்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், நேற்று, கணித வினாத்தாள், மிக எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.பெரும்பாலான வினாக்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றும், தேசிய ஆசிரியர் கல்வியல் ஆராய்ச்சி கவுன்சிலின் பாட புத்தகத்தில் இருந்தே இடம் பெற்றன. 

அதிலும், பல வினாக்கள் நேரடி வினாக்களாக இருந்ததால், மாணவர்கள் எளிதாக பதில் அளித்தனர்.பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்ட, பெரும்பாலான கேள்விகள், வினாத் தாளில் இடம் பெற்றது. அதேபோல, சி.பி.எஸ்.இ.,யின் விதிகளின்படி, சில கேள்விகள் மட்டும், மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் இடம் பெற்றன. ஒரு கேள்வியில், எழுத்துப் பிழை இருந்ததாகவும், அதை மாணவர்கள் தெரிந்துக் கொண்டதாகவும், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.