Monday, 4 March 2019
School Morning Prayer Activities - 5th March 2019
March 04, 2019
News
,
School Morning Prayer Activities
,
Students Zone
,
Teachers Zone
No comments
:
School Morning Prayer Activities - 5th March 2019
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 5th March 2019
திருக்குறள் : 143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.
உரை:
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
பழமொழி:
Like father like son
தந்தை எவ்வழி, தமையன் அவ்வழி
பொன்மொழி:
அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.
- கில்ப்பின்
இரண்டொழுக்க பண்பாடு :
1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொது அறிவு :
1) எந்தப் பறைவைக்கு சிறகு இல்லை ?
கிவி
2) இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார் ?
விண்டோன் செர்ஃப்
நீதிக்கதை : கரடியின் இலவச உணவு
உணவு தேடி வந்துகொண்டிருந்தது நரி. எதிரில் வந்த காட்டுப் பூனையைப் பார்த்ததும், “ஐயோ… என்ன ஆச்சு? ஒரு காலைத் தூக்கிக்கிட்டு நடந்து வர்றே?” என்று கேட்டது.
“உனக்கு விஷயமே தெரியாதா? போன வாரம் மரத்திலிருந்து இறங்கும்போது தவறி விழுந்துட்டேன். இன்னும் குணமாகலை. நம்ம கரடி உடல் நலம் இல்லாதவங்களுக்குத் தினமும் உணவு கொடுக்குது. அதை வாங்கிச் சாப்பிடுவதற்காகத்தான் போயிட்டிருக்கேன்” என்றது காட்டுப்பூனை.
“ஓ… கரடி எப்ப இந்த வேலையை ஆரம்பிச்சது? எனக்குத் தெரியாதே?”
“ஆறு மாசத்துக்கு முன்னால கரடிக்கு ஜூரம் வந்து படுத்தபோது, உணவுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டுச்சாம். உதவி செய்ய ஆளே இல்லையாம். தான் பட்ட கஷ்டத்தை இனி யாரும் படக் கூடாதுன்னுதான் ஆறு மாசமா இலவச உணவு சேவையை வழங்கிட்டு இருக்கு.”
“ஓ… யார் போனாலும் சாப்பாடு கொடுக்குமா?”
“இல்ல, உடம்பு சுகமில்லாத வங்களுக்குத்தான் கொடுக்கும். நான் வரேன்” என்று கிளம்பியது காட்டுப்பூனை.
அப்போது வயதான சிங்கம் ஒன்று மெதுவாக நடந்து வந்தது.
அதைப் பார்த்தவுடன், “என்ன தாத்தா, எங்கே கிளம்பிட்டே?” என்று கேட்டது நரி.
“இப்ப என்னால வேட்டையாட முடியறதில்லை. கரடிதான் தினமும் சாப்பாடு தருது. அங்கேதான் போயிட்டிருக்கேன்” என்று மெலிந்த உடலை இழுத்துக்கொண்டு நடந்தது சிங்கம்.
“கரடி அப்படி என்ன உணவுதான் கொடுக்கும்?”
“ம்… அசைவம் சாப்பிடற வங்களுக்கு இறைச்சி சூப், மீன், சைவம் சாப்பிடறவங்களுக்கு காய்கறி சூப், பழங்கள்னு கொடுக்கும். கரடி சமைக்கும் உணவு ரொம்பச் சுவையா இருக்கும். நான் வரேன்” என்றபடி சென்றது சிங்கம்.
“அடடா! இத்தனை நாளும் இந்த விஷயம் நமக்குத் தெரியாமல் போயிருச்சே! எப்படியாவது கரடியின் உணவைச் சாப்பிட்டே ஆகணும். ஏதாவது உடம்பு சரியில்லைன்னு பொய் சொன்னால், ஒரு மாதமாவது ஜாலியாக உட்கார்ந்து சாப்பிடலாம். காய்ச்சல்னு சொன்னால், உணவு கொடுக்காமல் சூப் மட்டும் கொடுத்துவிட்டால் என்ன செய்வது? வயிற்று வலின்னு சொன்னால், உணவே சாப்பிட வேணாம்னு சொல்லிட்டால்? ஐயோ… நான் என்ன காரணத்தைச் சொல்ல முடியும்? அதோ கரடியின் வீடே வந்துருச்சு. சரி, கால் ஒடிந்ததாகவே சொல்லிடலாம்” என்று நினைத்த நரி, காலில் கட்டுப் போட்டுக்கொண்டு நடந்தது.
கரடி வீட்டு வாசலில் வரிசையாக விலங்குகள் நின்றன. நரியும் வரிசையில் சேர்ந்துகொண்டது. அதைக் கண்ட காட்டுப்பூனை, “என்னப்பா, இப்பதான் நல்லா பேசிட்டு இருந்தே. அதுக்குள்ளே எப்படிக் காலை உடைச்சிக்கிட்டே?” என்று ஆச்சரியமாகக் கேட்டது.
“ஒரு பள்ளத்தைக் கவனிக்காமல் தவறி விழுந்துட்டேன். கால் உடைஞ்சிடுச்சு. வலி உயிர் போகுது. வரிசையில் நிக்க முடியலை. என்னை முன்னால விட முடியுமா?” என்று கேட்டது நரி.
“முயல், மான், சிங்கம் எல்லாம் கொஞ்சம் வழி விடுங்க. நரியால் நிக்கக்கூட முடியல. சாப்பாடு வாங்கிட்டுப் போகட்டும்” என்றது காட்டுப்பூனை.
வரிசையில் நின்ற விலங்குகள் நரியை முன்னால் அனுப்பின.
அடடா! வாசனை மூக்கைத் துளைக்குது. இரவு சாப்பாட்டையும் வாங்கிட்டுப் போயிடணும். ஒரு காலைத் தூக்கிட்டு நடக்கக் கஷ்டமா இருக்கு’ என்று நரி நினைத்துக்கொண்டிருந்தபோது, வெளியே வந்த கரடி விசாரித்தது. ஓர் உணவு பொட்டலத்தைக் கொடுத்தது.
“என்னால் இரவு வர முடியாது. இன்னும் ஒரு பொட்டலம் கொடுத்தால் நல்லது” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டது நரி.
“இதைச் சாப்பிடு. கிளம்பும்போது இன்னொரு பொட்டலம் தரேன். ரொம்ப வலியா இருந்தால் உன் வீட்டுக்கே சாப்பாட்டை அனுப்பி வைக்கிறேன். அலைய வேண்டாம்” என்றது கரடி.
நரியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மற்ற விலங்குகளோடு அமர்ந்து சாப்பிட்டது. உடனே தூக்கம் வந்தது. எதையும் யோசிக்காமல் கரடி வீட்டை விட்டு வெளியே வந்தது. சிறிது தூரம் வந்த பிறகு, காலில் உள்ள கட்டை அவிழ்த்து வீசியது.
“அப்பாடா! ஒரு காலைக் கட்டிக்கிட்டு காயம் பட்டதுபோல் நடிக்கிறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. நல்லவேளை, நாளை வீட்டுக்கே உணவு வந்துடும். ஒரு மாசத்துக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். ஜாலியான வாழ்க்கை” என்று தனக்குத்தானே நரி பேசிக்கொண்டே நடந்தபோது, கரடி அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தது.
“ஐயோ… எதுக்கு இந்தக் கரடி என்னைத் துரத்திட்டு வருது? நான் ஏமாத்தியதைக் கண்டுபிடிச்சிருச்சோ? சிக்கினால் தர்ம அடிதான். வேகமா ஓடித் தப்பிச்சிடலாம்” என்று ஓட ஆரம்பித்தது நரி.
கரடியும் அழைத்துக்கொண்டே ஓடிவந்தது. இதைக் கண்ட நரி வேகத்தை அதிகரித்தது. எதிரில் விழுந்து கிடந்த பெரிய மரத்தைப் பார்க்காமல் தடுக்கி விழுந்தது. நிஜமாகவே கால் உடைந்துவிட்டது. வலியில் அலறியது.
அருகில் வந்த கரடி, “ஐயோ… பட்ட காலிலேயே பட்டுருச்சே… ஏன் இப்படி அடிபட்ட காலோடு ஓடினே? இரவு சாப்பாடு கேட்டியே, வாங்கிக்காமல் போயிட்டியேன்னு எடுத்துட்டு வந்தேன். இந்தா சாப்பாடு” என்று பக்கத்தில் வைத்துவிட்டுக் கிளம்பியது கரடி.
“சாப்பாடா முக்கியம்? நிஜமாவே கால் உடைஞ்சிருச்சு. என்னை வைத்தியர் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போ” என்று கெஞ்சியது நரி.
“நீ ஓடும்போதே எனக்குத் தெரிஞ்சுருச்சு, உன் கால் நல்லா இருக்குன்னு. பக்கத்தில்தான் வைத்தியர் வீடு, மெதுவா போய் வைத்தியம் பண்ணிக்க. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு நடந்தது கரடி.
“ஐயோ… உன்னை ஏமாத்தினது தப்புதான். இனி யாரையும் ஏமாத்த மாட்டேன். உழைக்காமல் எதையும் சாப்பிட மாட்டேன்” என்று கத்தியது நரி.
வைத்தியர் வீட்டில் நரியை விட்டுவிட்டுச் சென்றது கரடி.
இன்றைய செய்தி துளிகள் :
1) தரமான உயர்கல்வி வழங்குவதில் உலக தரவரிசை பட்டியலில் விஐடி பல்கலை.,..... இங்கிலாந்தின் கியூஎஸ் அமைப்பு அறிவிப்பு
2) பிளஸ் 2 பொதுத்தேர்வு 'நீட்' பயிற்சி ஒத்திவைப்பு
3) வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
4) தமிழக உள் மாவட்டங்களை 6, 7ம் தேதிகளில் வாட்டி வதைக்க போகும் வெயில் : வானிலை மையம் எச்சரிக்கை
5) 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பு
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment