அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் - விழா எடுத்துக் கொண்டாடிய பெற்றோர்கள்!காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்பருவக் கல்வி திட்டத்தின் கீழ் 123 பள்ளிகளில் நேற்று எல்.கே.ஜி வகுப்புகள் துவங்கப்பட்டன. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதை விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அரசுப் பள்ளியில் முன்பருவ கல்வி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி நேற்று முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 123 நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி முன்பருவ கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன. காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கீழம்பி, ஒலி முகமது பேட்டை போன்ற இடங்களில் உள்ள பள்ளிகளில் நேற்று எல்.கே.ஜி வகுப்பு துவக்கவிழா நடைபெற்றது.

இதில் சராசரியாக 20 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் துவங்கப்பட்டன. பள்ளிக் கல்வித்துறை யில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி துவக்கப்பட்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது.

வாழைமரம், தோரணங்கள், வண்ண வண்ண கோலம் கட்டி அந்தந்த பள்ளிகளில் ஏற்பாடு செய்திருந்தார்கள். புதிதாக வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பலூன் கொடுத்து வரவேற்றார்கள். முதன்முறையாகப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் என்பதால்  அவர்களுக்கு ஆசிரியர்கள் நெல்லில் ‘அ’ எழுத கற்றுக் கொடுத்தார்கள்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் ஆன்ஜிலோ இருதயராஜ் “அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே ஆங்கில வழிக் கல்வி இருக்கிறது.

இங்கே ஆங்கில வழியில் ஃபொனடிக் முறையில் ஆங்கில பயிற்சி அளிக்கிறோம். கின்டர் கார்டன், எல்.கே.ஜி வகுப்புகளுக்குத் தனியார் பள்ளிக்கு அனுப்புகிறோம். அங்கு அதிக பணம் வசூலிக்கிறார்கள். அதே தரத்தில் அரசுப் பள்ளியில் எந்த கட்டணமும் இல்லாமல் உங்கள் குழந்தைகளை இங்கே படிக்க வைக்கலாம்.” என்றார்.

“அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பு தொடங்கப்பட்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடாகப் படிக்கிறார்கள். மதிப்பெண் முறை நீக்கப்பட்டு கிரேடு முறை வந்திருப்பதால் மாணவர்களின் மன அழுத்தம் குறைகிறது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் தரமான ஆரம்பக் கல்வி கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்கள் பெற்றோர்கள்