ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் அறிவிப்பு காலஅட்டவணை தயாரிக்கும் பணி மும்முரம்


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. புதிய ஊழியர்களைத் தேர்வு செய்ய ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பது பற்றிய தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் (டிஎன்பி எஸ்சி), ஆசிரியர்களை தேர்வு செய்யும் ஆசிரியர் தேர்வு வாரியமும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன. 

2019-ம் ஆண்டுக் கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் தேர்வு கால அட்டவணையை வெளியிடவில்லை. மேலும், கடந்த ஆண்டு தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்ற ஒருசில தேர்வுகள் (உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வு, விவசாய ஆசிரியர் தேர்வு, அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு) இன்னும் அறிவிக்கப்படவே இல்லை.ஆண்டுதோறும் கட்டாயம் நடத்தப் பட வேண்டிய தகுதித்தேர்வும் கடந்த ஆண்டு நடத்தவில்லை. அதோடு 2 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர் வுக்கான (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி) இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட சிறப்பாசிரியர் தற்காலிக தேர்வுப் பட்டியல் வழக்குகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி மருத்துவ விடுப்பில் இருப்பதால் அவர் வகித்து வந்த பொறுப்பு ஒருங்கிணை கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) கூடுதல் இயக்குநர் என்.வெங்க டேஷிடம் கடந்த வாரம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் பொறுப்பு தலைவரான வெங்கடேஷிடம் வாரியத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, "ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விரை வில் அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், வருடாந்திர தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது" என்றார். கடந்த ஆண்டு வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் இடம் பெற்று அறிவிக்கப்படாத தேர்வு கள், சிறப்பாசிரியர் தேர்வு விவகாரம் குறித்து ஆய்வு செய்துவருவதாகவும் கூறினார்.