CBSE: கணிதத்தில் தேர்வடைய எளிய முறை!


2020ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பில் கணிதத் தேர்வுக்கு இரண்டு நிலைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

நேற்று (ஜனவரி 11) இது குறித்து சிபிஎஸ்இ சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. “2020ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். தற்போது இருக்கும் கணிதம்-தரநிலை (Mathematics-Standard), நடைமுறையுடன் கூடுதலாக இரண்டாம் நிலையாக கணிதம்-அடிப்படை (Mathematics-Basic) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கணிதத்தில் தோல்வியடையும் மாணவர்கள், இரண்டு நிலைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். கற்பிக்கப்படும் பாடங்கள், அகமதிப்பீடு முறை இரண்டு நிலைகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இதன்மூலம், மாணவர்கள் அனைத்து வகையான பாடங்களைக் கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிதத் தேர்வில் இரண்டாவது நிலையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் கணிதத்தைத் தேர்வு செய்வதற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள். உயர் கல்வியில் கணிதத்தைத் தொடர, கணிதம்-தரநிலை தேர்வு தகுதியாகக் கருதப்படும். இரண்டு நிலைகளில் எதைத் தேர்வு செய்ய வேண்டுமென்பது மாணவர்களின் உரிமை. மாணவர்கள் தங்களது தேர்வைத் தேர்வு வாரியத்துக்கு முன்பாகச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.