Jactto-Geo Strike : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வு காணவேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ளது.

கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிர்வாகி எஸ்.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன், மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவிப்பதோடு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும்.

கடந்த கால் நூற்றாண்டில் இந்திய விவசாய உற்பத்தியும், வேலைவாய்ப்பும் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துவிட்டது. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களாலும், கட்டுபடியற்ற விலையாலும் விவசாயிகள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். எனவே, விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும். ஆயுத தளவாடங்கள் உள்பட பாதுகப்புத் துறையின் உற்பத்திகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்துவதோடு, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் பாதுகாப்புத் துறை ஊழியர்களின் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது