சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்: வினாத்தாள், 'லீக்' ஆவதை தடுக்க முன் ஏற்பாடுகள்


சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.

முதல் கட்டமாக தொழிற்கல்வி மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், மார்ச், 2ல் துவங்க உள்ளன. 10ம் வகுப்புக்கான தேர்வு, வரும், 21ல்துவங்குகிறது. பத்தாம் வகுப்பில், 18.27 லட்சம் பேர்; பிளஸ் 2வில், 12.87 லட்சம் பேரும், தேர்வில் பங்கேற்கின்றனர்.வெளிநாடுகளில் உள்ள, 225 பள்ளிகள் உட்பட, மொத்தம், 21 ஆயிரத்து, 625 பள்ளிகளின் மாணவர்கள், தேர்வில் பங்கேற்கின்றனர்.

தேர்வுக்கு, இந்தியாவில், 4,974; வெளிநாடுகளில், 95 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான பணிகளில், மூன்று லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஈடுபடுவர்.'லீக்' விவகாரம்கடந்த ஆண்டில், சி.பி.எஸ்.இ., தேர்வில், பொருளியல் மற்றும் கணித வினாத்தாள்கள், 'பேஸ் புக், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், 'லீக்' ஆகின.இது குறித்து, டில்லி போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.இந்த ஆண்டில், தேர்வில் முறைகேடுகள், வினாத்தாள் லீக், சமூக வலைதளங்களில் வினாத்தாள் தொடர்பான வதந்திகளை தடுக்க, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சி.பி.எஸ்.இ., செயலர், அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்:

*காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கும். தாமதமாகவரும் மாணவர்கள், தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. ஹால் டிக்கெட் கட்டாயம் எடுத்து வரவேண்டும்

* மொபைல்போன், கால்குலேட்டர், மின்னணு உபகரண பொருட்கள், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சார்ந்த கருவிகள், வை - பை கருவிகள் என, எந்த பொருளையும், தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதியில்லை

* பள்ளிகளில், 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' வழியாகமாணவர்களுக்கு, தேர்வு முறை மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்

* மாதிரி வினாத்தாள், பழைய வினாத்தாள், துண்டு பேப்பர் உள்ளிட்டவற்றை, மறைத்து எடுத்து வருவது கூடாது

* சமூக வலைதளங்களில் பரவும், தேர்வு தொடர்பான வதந்திகள் மற்றும் தகவல்களை நம்ப வேண்டாம்

* தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, தேர்வு நடவடிக்கைகள் பதிவு செய்யப்படும்.தேர்வு மையங்களில் இருந்து, ஒருங்கிணைந்த தேர்வு கண்காணிப்பு அறைக்கு, ஆன்லைன் வழியில், நேரலை தகவல் பரிமாற்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முன்கூட்டியே தேர்வு ஏன்?

சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான பொது தேர்வுகள், வழக்க மாக, மார்ச் முதல் ஏப்ரல் வரை நடத்தப்படும். தேர்வு முடிவுகள், ஜூனில் வெளியாகும்.துணை தேர்வின் முடிவுகள் வர, ஆகஸ்ட் மாதமாகி விடும். அதற்குள், நாட்டில் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை முடிந்து விடும்.இது தொடர்பான வழக்கில், தேர்வை முன் கூட்டியே நடத்த, டில்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து, மார்ச்சில் தேர்வை துவங்குவதற்கு பதில், பிப்ரவரியில் துவங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.