கம்பெனி செக்ரட்ரிஷிப்' தேர்வு : சென்னை மாணவி 2ம் இடம்


கம்பெனி செக்ரட்ரிஷிப்' பதவிக்கான நுழைவு தேர்வில், தமிழக மாணவி நிவேதிதா, தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

கம்பெனி செக்ரட்ரிஷிப் பதவி பெற விரும்புவோருக்காக, தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்திய கம்பெனி செக்ரட்ரிஷிப் நிறுவனமான, ஐ.சி.எஸ்.ஐ., சார்பில், டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.

இதில், நிர்வாக பதவிக்கான எக்ஸ்கியூட்டிவ் பிரிவில், பழைய பாடத் திட்டத்தில், ஆந்திராவை சேர்ந்த மலிசெட்டி என்ற மாணவர், தேசிய அளவில் முதல் இடம் பெற்றார். தமிழகத்தில், சென்னையை சேர்ந்த நிவேதிதா, இரண்டாம் இடம்; மேற்கு வங்கத்தை சேர்ந்த அங்கிட் அகர்வால், மூன்றாம் இடம் பிடித்தனர்.

புதிய பாடத் திட்டத்தில், தெலுங்கானாவை சேர்ந்த பாபு வெங்கடேசம், தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

கணினி வழியில் நடந்த, இந்த தேர்வில், பழைய பாடத் திட்டத்தில், 5.24 சதவீதம், புதிய பாடத் திட்டத்தில், 9.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.


தேசிய, 'ரேங்க்' பெற்ற, மாணவி நிவேதிதா, சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த, நடராஜன் என்பவரின் மகள். இவர், தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில் படித்து, 10ம் வகுப்பில், 487 மதிப்பெண்; பிளஸ் 2வில், 1,193 மதிப்பெண் பெற்றவர்.

மேலும், சி.ஏ., தேர்வில், முதல் பிரிவில், 79 சதவீதம், இரண்டாம் பிரிவில், 63 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்.