50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு


தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறையில் மொத்தம் 128 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 50 பணியிடங்கள் நிரப்பப்படாமல் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தன. அந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என  தலைமை ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில்,  பதிவு மூப்பு அடிப்படையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.  இதற்கான நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் மேற்கொண்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக காலியாக இருந்த மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகளும்,  பள்ளி ஆண்டுத் தேர்வுகளுக்கான பணிகளும் தடையின்றி நடைபெறும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.