விடுமுறை தினத்திலும் ஊதியம் பிடிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !


வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை தினமான குடியரசு தினத்தன்றும் ஊதியம் பிடிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பங்கேற்று வேலைக்கு வராத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடந்த 22-ம் தேதி முதல் கணக்கெடுத்து சனி மற்றும் ஞாயிற்று கிழமையும் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. அதனையடுத்து அரசு ஊழியர்கள் மற்றுப் ஆசிரியர்களின் சம்பளம் கருவூலத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், வேலைக்கு வராதவர்களின் சம்பளத்தை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.