திணறல்! ஆய்வக உதவியாளர்களின்றி அரசு பள்ளிகள்.. செய்முறை தேர்வு சிக்கல் தீர்க்கப்படுமா?


மதுரையில் பெரும்பாலான அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பிளஸ் 2 செய்முறை தேர்வு மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. 

மாவட்டத்தில் பிப்.,1 முதல் இத்தேர்வு நடக்கிறது. 199 மேல்நிலை பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதைதொடர்ந்து பிளஸ் 1 தேர்வும் பிப்., 21 வரை நடக்கிறது. ஆனால் பெரும்பாலான அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால் ஆய்வகங்களை பராமரிப்பது, தேர்வின் போது மாணவர்களுக்கு உபகரணங்கள், கெமிக்கல்ஸ் போன்றவை எடுத்து வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. உதவியாளர் பணியை அப்பள்ளி ஆசிரியர்களே மேற்கொள்கின்றனர். ஆனால் உயர்நிலை மற்றும் செய்முறை தேர்வு நடக்காத பல பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு பெரும் பாலும் அலுவலகம் அல்லது தபால் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆய்வக உதவியாளர் இல்லாத பள்ளிகளில் செய்முறை தேர்வில் பங்கேற்பது மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் 50 சதவீதம் மேல்நிலை பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேநேரம் பெரும்பாலான அரசு உயர் நிலை மற்றும் தேர்வு மையங்கள் இல்லாத பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்கள் உள்ளனர். அவர்களை செய்முறை தேர்வுகள் முடியும் வரை ஆய்வக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் நியமிக்க வேண்டும். தேர்வு மையம் இல்லாத பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர்களை தேர்வு நடக்கும் பள்ளிக்கு தற்காலிக அடிப்படையில் மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.