ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகள் ஆய்வு


 'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகளில், நிதி பிரச்னை இல்லாத அம்சங்களை ஆய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், ஒன்பது நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டம், 
அரசு மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, ஆசிரியர்கள் பல்வேறு விமர்சனங்களையும், போராட்ட யுக்திகளையும் கையாண்டனர்.வாபஸ்ஆனால், அரசின் பல கட்ட நெருக்கடிகள் மற்றும் எச்சரிக்கைகளால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்கும் வகையில், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், இரண்டு நாட்களாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, மனு அளித்து வருகின்றனர்.இதை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகளில், அரசின் நிதி சுமையை பாதிக்காத, நியாயமான கோரிக்கைகளை ஆய்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுஉள்ளது. அதிகாரிகள்நிதித்துறை, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறை அதிகாரிகள், இந்த ஆய்வை துவக்கி உள்ளனர்.ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் என்ன; அவற்றின் நிலை; எந்த ஆண்டு முதல் இந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன; இவ்வளவு ஆண்டுகளாக கோரிக்கைகள் நீடிக்க காரணம் என்ன என, ஆய்வு செய்யப்படுகிறது. கோரிக்கைகளின் தன்மை மற்றும் அதன் நியாயமான அம்சங்களை, தமிழக அரசுக்கு, ஒவ்வொரு துறையும் பரிந்துரை செய்ய உள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.'அரசு பேச்சு நடத்த வேண்டும்'தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி, நேற்று வெளியிட்ட அறிக்கை:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற, 1,500க்கும் மேற்பட்டோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது; 2,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தமிழக அரசின் அடித்தளமாக விளங்குபவர்கள். அவர்கள் மீது, பழிவாங்கும் நடவடிக்கைகளை ஏவிவிட்டு, ஒரு அரசு இயங்க முடியாது. பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு, தமிழக அரசு, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரிடம் உடனே பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.