தனியார்பள்ளிகளின் அசுரவளர்ச்சிக்கு யார் காரணம்:ஓர் அலசல்:சிறு உதாரணம்...!!


அரசுப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமியின் பதிவு இது.


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-செல்லங்குப்பம்,திருவண்ணாமலை மாவட்டம்-இதுதான் நான் பயின்ற பள்ளி.இந்து சமயத்தில் ஆதிக்க சாதியாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் இடைநிலைசாதிக்குழந்தைகளும், ஒடுக்கப்பட்டு,புறந்தள்ளப்பட்டு சேரிகள் என்னும் வசிப்பிடத்தில் வாழும் காலனிப்பகுதிக் குழந்தைகளும் சம விகிதத்தில் படித்தோம்.

#நிற்க:காலனியாதிக்கம் என்ற சொல், வரலாறு புத்தகத்தில் பயன்படுத்தப்படுவதன் கூறுகளை ஆய்க.

95களில் ஆரம்பித்து, 1998-களுக்குப் பிறகு இந்த விகிதாச்சாரம் படிப்படியான மாற்றத்தை அடைந்தது.

மலையடி:மலைமுகடு என விகிதாச்சாரம் இருந்தாலும்
குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை உயர்ந்திருந்தது.எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான காரணம் மக்கள் தொகை அதிகரிப்பாக இருக்கலாம்.ஆனால்.......

#விகிதாச்சாரம்_குறைய_என்ன_காரணம்?

காலனிப்பகுதியைச் சார்ந்த குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகள் படிக்கவேண்டுமா?என்ற கேள்வியை எழுப்பியவண்ணம் இருந்த ஜாதிவெறியர்கள் பலரும் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு மஞ்சள் நிற வாகனத்தில் அனுப்பினர்.இதற்கு இன்னொரு காரணம் பள்ளியின் தலைமையாசியர் கிறித்துவ-ஆதிதிராவிடர்.இவனிடம் என் குழந்தைகள் படிக்கவேண்டுமா என்ற உலகளாவிய சிந்தனை.(இவரை சமீபத்தில் பழிவாங்கவும் செய்தனர்).250க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்ற செல்லங்குப்பம் தொடக்கப்பள்ளி தற்போது நூறில் வந்து நிற்கிறது.
#நிற்க:அதிகக்குழந்தைகள் இருந்ததால் உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு,தனித்தனியாக இயங்குகிறது கடந்த 5 ஆண்டுகளாக.

மேற்கண்ட தகவல் ஒரு சிறு உதாரணத்திற்காக.

#ஜாதிவெறிதான்_அரசுப்பள்ளிகளை_அழிக்க_நினைக்கிறதா?
ஆம்!உண்மை.இந்தக் கேள்வியை சற்று மாற்றலாக இப்படிக் கேட்டுப்பார்ப்போம்.

ஜாதிவெறிதான் தனியார் பள்ளிகளின் அசுர வளர்ச்சிக்குக் காரணமா?ஆம்.
ஒன்றின் வீழ்ச்சிக்கும் பிறிதொன்றின் வளர்ச்சிக்கும் நிறையத்தொடர்பிருக்கிறது.

சூழ்நிலை மண்டலத்தில் உணவுச்சங்கிலி அமைப்பில் வருவதைப்போன்று இந்த மாற்றங்கள் நிகழும்.உதாரணத்திற்கு எலிகளின் அழிவு கழுகுகளின் வளர்ச்சிக்கு வழிகோலுவது போல்!எலிகளின்(அரசுப்பள்ளிகள்)எண்ணிக்கை அதிகமிங்கே.எலிகள் தானாக இறப்பதில்லை(மூடிக்கொள்வதில்லை);மாறாக வேட்டையாடப்படுகின்றன ஜாதிவெறியர்கள் என்னும் வேட்டைக்காரர்களாலும், அரசியல்வாதிகளாலும்...தனியார்மயம்/கார்ப்பரேட்டுகள் என்ற சில கழுகுகளுக்காக.
இந்தத் தகவல் அபத்தமாகத் தெரிகிறதா? வாருங்கள் ஓர் அலசல் அலசுவோம்.கீழ்க்கண்ட வினாக்களை எழுப்பி அலசுவோமா?

*உங்கள் கிராமத்தின் அரசுப்பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் எச்சமூகக்குழந்தைகள்?

*உங்கள் கிராமத்தின் அரசுப்பள்ளியில் அனைத்துத் தரப்புக் குழந்தைகளும் படிக்கின்றனர் எனில் விகிதாச்சாரம் மக்கள்தொகைக்கேற்ப உள்ளதா?

*உங்கள் கிராமத்திற்குள் வரும் மஞ்சள் நிற வாகனத்தில் ஏற்றப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை?அவர்களின் பின்புலம்?

*உங்கள் கிராமத்தின் அரசுப்பள்ளி அமைந்துள்ள இடம்
ஆதிக்கஜாதிக்குடியிருப்புக்கு அருகில்/காலனிப்பகுதிக்கு அருகில்?

*பள்ளி...ஆதிக்க ஜாதிக்குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்திருப்பின் மற்ற ஜாதிக்குழந்தைகள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி பயணித்துப் பள்ளியை அடைய முடிகிறதா?
பள்ளி....காலனிப்பகுதிக்கு அருகிலிருந்தால் ஆதிக்க ஜாதிக்குழந்தைகள் எந்தப்பள்ளியில் வந்து படிக்கின்றனரா?

*ஆதிக்க ஜாதிக்குழந்தைகள் அதிகம் பயிலும் அரசுப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சமூக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் எவ்வித மன உளைச்சல்&பயமின்றிப் பணியாற்றுகின்றனரா?

*உங்கள் கிராமத்தின் அரசுப்பள்ளியின்..பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர்/பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் யார்?அவரின் பின்புலம்?

*பள்ளியில் பயிலும் குழந்தைகள் தங்களின் ஜாதிக்கிறியீடுகளை கையில் கட்டும் கயிறிலிருந்துத் தொடங்கி வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்துகின்றனரா?

*பள்ளியில் தண்ணீர் குடிக்க,இரட்டைக்குவளை/இரட்டைப்பானை முறையுள்ளதா?
....................இப்படி கேள்விகள் ஏராளம்.பதில் உங்கள் ஒவ்வொருவரிடத்திலுமே உள்ளது.

தனியார் பள்ளிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டது சமீபத்திய காலக்கட்டத்தில் தான்.ஆதிக்கங்களும்,பாகுப்பாட்டால் அடிப்பட்டு பயந்துபோன இனத்தில் சிலவும்,என் தலைமுறையோடு இந்தப் பாகுபாடு போகட்டும்..என்பிள்ளைகளுக்கு இது எதுவுமே தெரியக்கூடாது என்று ஒதுங்கிய இனத்தில் சிலவும் அரசுப்பள்ளிகளிலிருந்து தங்களை நகர்த்திக்கொண்டு,தனியார்பள்ளிகளில் அடைக்கலமானது.

ஓரளவு நிலம் படைத்தவர்களும், பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேறியவர்களும்கூட தற்போது தனியார் பள்ளிகளை நோக்கி ஓடுவது அறிவு வளர்ச்சிக்காக மட்டும் அல்ல;சுய கௌரவத்திற்காகவும்,மூன்றாம் நபரின் ஏச்சுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவுமே என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.ஆனாலும்.........
#நிற்க:அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கா பாடம் சொல்லித்தந்தால் அவர்கள் ஏன் தனியார்பள்ளிக்குப் போகிறார்கள் என்று கேட்பவர்கள் மேலே இருக்கும் கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளவும்.

சரி.....அடுத்து
#தனியார்பள்ளிகள்_குறித்து_வினா_எழுப்புவோம்:

*தனியார் பள்ளிகளின் முதலாளிகள் யார்?

*தனியார் பள்ளிகளில் அதிகம் பயிலும் குழந்தைகள்?(ஆதிக்கம்/தாழ்த்தப்பட்ட)

*தனியார் பள்ளிகள் திறக்க அங்கீகாரம் வழங்குபவர்கள்,அதிகாரம் படைத்தவர்கள் யார்?

*ஓர் அரசுப்பள்ளித் திறக்கப்படவேண்டுமானால் 3கிமீ தூரத்தில் எந்த அரசுப்பள்ளியும் இருக்கக்கூடாது.ஆனால் ஒரு தனியார் பள்ளித் திறக்க தூரம்/தொலைவு சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லாதது ஏன்?

*ஓர் அரசுப்பள்ளி மூடப்பட்டால் 5 அரசுப்பணியிடங்களை இழப்பது தனியார் பள்ளி முதலாளிகளின் தலைமுறையா?அல்லது படித்துவிட்டு வேலைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் இளைஞர் சமூகமா?

#நிற்க:விரல்விட்டு எண்ணும் அளவில் சிலர் மட்டுமே  தன்னலமின்றி தனியார்பள்ளிகளை நடத்துகின்றனர்.அவர்கள் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம்.

ஒன்றின் வீழ்ச்சி மற்றொன்றின் எழுச்சியாக இருக்கலாம்.ஆனால் பலவற்றின் மரணம்,பல தலைமுறைகளின் மரணம்,அடிப்படை உரிமை பறிப்பின்/மறுப்பின் அரங்கேற்றம்,சமூகநீதியின் மரணம்....

#சிந்திக்க:ஒவ்வொருவரும்,வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 3%கல்விசேவை செலுத்துகிறோம்.கல்வி பெறுவது அடிப்படை உரிமை.

#வெளியில்_நிற்க:அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஏன் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதில்லை?என்ற கேள்வியுடையோர்.
 
#குறிப்பு:அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் இவர்களின்மேல் குறைசொல்பவர்களும் ஜாதியைக் கடந்து யோசிக்கவும் 

மனிதராக&மனிதியாக.