அதிகாரி நியமனம் தாமதம் பொதுத்தேர்வு பணிகளில் குழப்பம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, ஒரு வாரமே உள்ள நிலையில், மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப் படாததால், தேர்வு ஆலோசனை கூட்டங்கள் தாமதமாகி உள்ளன.

பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுதேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், மார்ச், 1ல், பொது தேர்வு துவங்க உள்ளது.

இதில், 27 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இதற்காக, 3,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.தேர்வு மையம் அமைத்தல், கண்காணிப்பாளர் நியமனம் உள்ளிட்ட, தேர்வுக்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனாலும், தேர்வுக்கான விதிகள், தேர்வில் கண்காணிப்பாளர் நடந்துக் கொள்ள வேண்டிய முறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள், இன்னும்நடத்தப்படவில்லை.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், பொதுத் தேர்வுக்கு இரண்டு வாரங்கள் முன், மாவட்ட வாரியான பொறுப்பு அதிகாரிகளாக, இணை இயக்குனர்கள் நியமிக்கப்படுவர்.

 இணை இயக்குனர்கள் நேரடியாக, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, கூட்டங்களை நடத்தி, ஆலோசனைகள் வழங்குவர்.இந்த முறை, இன்னும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படாததால், பெரும்பாலான மாவட்டங்களில், தேர்வு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. பொறுப்பு அதிகாரிகள் இன்றி, தேர்வை நடத்தினால், முறைகேடுகளை கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.