சமூக நீதி சாத்தியமாகட்டும் இன்று சர்வதேச சமூக நீதி தினம்சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தலே சமூகநீதியாகும். அதாவது ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு சமூகத்தில், அரசானது மக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதா கும். சமூக நீதி என்பது வெறும் சாதி அடிப்படையிலானது அல்ல. சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கும் உதவுவதே சமூகநீதி என்ற கருத்தும் உண்டு

நுாற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட சமூக மேம்பாட்டிற்கான உலக உச்ச மாநாடு 1995 ல் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் நடைபெற்றது. 'உலக நாடுகளில் காணப்படும் வறுமையை அகற்றி, முழுநேர வேலை வாய்ப்பை அதிகரித்து அனைத்துத்
தரப்பினரும் மனித மாண்போடும் பாதுகாப்போடும் வாழத்தக்க சமுதாயமாக உலக நாடுகள் அமைய வேண்டும்' என்பதுதான் இம்மாநாட்டின் முக்கியஅம்சமாகப் பேசப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சமூக மேம்பாட்டு ஆணையம் 2005ல் பிப்ரவரி நியூயார்க்கில் கூடிய போது ஐ.நா. தனது உறுப்பு நாடுகளுடன் இணைந்து கோபன்ஹேகன் பிரகடனத்தை மேலாய்வு செய்தது. இதன் அடிப்படையில் சமூக வளர்ச்சிக்கான சில செயல்திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. சமூக வளர்ச்சிக்கு சமூக நீதி இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வதால், பிப்ரவரி 20ம் தேதியை அகில உலக சமூக நீதி தினமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற ஐ.நா.வின் பொது சபையின் அமர்வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதற்கிணங்க 2009ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையக்கருத்தை முன்வைத்து சர்வதேச சமூக நீதி தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது. 'நீங்கள் அமைதியையும் வளர்ச்சியையும் விரும்பினால் சமூகநீதிக்காக பணியாற்றுங்கள்' என்பதுதான் இந்தாண்டு
சமூகநீதி தினத்துக்கான மையக்கரு.

வறுமை அகன்றால்

வறுமை அகன்றால்தான் அமைதியும் வளர்ச்சியும் சாத்தியம். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, 'சுதந்திர இந்தியாவின் முதற்பணியென்பது, பஞ்சம் பட்டினியில் வாழும் வறியோருக்கு தேவையான உணவும், உடையும் கிடைக்கச் செய்து, தனி மனித வளர்ச்சிக்காக புதிய சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்துவதுதான்' என குறிப்பிட்டார். வறுமை அகல வேலைவாய்ப்பு
அதிகரிக்கவேண்டும். அதுதான் வளர்ச்சியினை ஏற்படுத்தும்.

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக, தேசிய மாதிரி புள்ளியியல் ஆய்வு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, பிசினஸ் ஸ்டேண்டர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 2017--18ம் நிதியாண்டில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

2017--18ம் நிதியாண்டில் நகரங்களில் வேலையில்லாத ஆண்களின் விகிதம் 18.7 சதவிகிதமாகவும், பெண்களின் விகிதம் 27.2 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலையில்லாத ஆண்களின் விகிதம் 17.4 சதவிகிதமாகவும், பெண்களின் விகிதம் 13.6 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 70.3 மில்லியன் பேர் மிகக் கடுமையான வறுமையில் இருப்பதாக அண்மையில் வெளியான புரூக்கிங்ஸ் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 44 பேர் மிகக் கடுமையான வறுமையில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2022ல் 15 மில்லியனாகக் குறைந்துவிடும் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தீவிர வறுமைநிலை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று 'வேல்டு பாவர்ட்டி கிளாக்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது.

சமூகநீதி

அதேநேரத்தில், 'வறுமை ஒழிப்பை இலக்காக வைத்து அனுசரிக்கப்படும் சமூக நீதி தினத்தில், வறுமையின் எதிர்ச்சொல் என்னவென்று தேடினால் அது செல்வமோ வளமையோ அல்ல. பல வேளைகளில் பல் வேறு இடங்களில் அது நீதி என்றுதான் பொருள்படுகிறது' என்கிறார் சமநீதி அமைப்பின் நிர்வாக இயக்குனரும் வழக்கறிஞருமான பிரையன் ஸ்டீவன்சன்.

எங்கே நீதி மறுக்கப்படுகிறதோ அங்கே ஜனநாயகம் மெலிந்து ஊழல் மலிந்து காணப்படும். எனவே ஒரு நாட்டின் ஆட்சி மற்றும் நீதி நெறி முறைகளுக்கும், அச்சமுதாயத்தில் பரவலாகக் காணப்படும் வறுமைக்கும் தொடர்பு உண்டு.இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைகுழுவில் இருந்த அம்பேத்கர் போன்ற சட்ட நிபுணர்கள் சமத்துவம் மற்றும் சமூக நீதி போன்ற கோட்பாடுகளால் உந்தப்பட்டவர்கள்.

எனவே தான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் (சட்டப் பிரிவு 14), ஜாதி, மத, இன, பாலியல் வேறுபாடுகள் அடிப்படையில் பாகுபாடு கூடாது (சட்டப் பிரிவு 15), பொது நிறுவனங்களில் பாரபட்சமற்ற சம வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் (சட்டப்பிரிவு 17) ஆகிய பிரிவுகள் சமூக நீதியை மையப்படுத்தி வரையப்பட்ட சட்டங்கள் ஆகும். நாட்டின் வளங்கள், வருமானம், வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவதில் சமத்துவமும், பாரபட்சமின்மையும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சாசனம் வலியுறுத்துகிறது.

இன்றைய நிலை

'வளர்ச்சித் திட்டப் பாதையில் இந்தியாவின் இடத்தைக் கவனித்தால் வறுமை ஒழிப்பு, கொடிய நோய்கள் பரவாமல் தடுத்தல், ஆரம்பக் கல்வி கிடைக்கச் செய்தல் போன்ற இலக்குகளில் வரவேற்கத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், அரசியல் பங்களிப்பு, வேலை வாய்ப்புகளில்பெண்களுக்கு உரிமை முழு அளவில் கிடைத்ததாகச் சொல்வதற்கில்லை.

கருக்கொலை மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தில் திருப்திகரமான மாற்றங்கள் இன்னும் கொண்டு வரப்படவில்லை.' என ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட நிபுணர் குழுவில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சரி செய்யப்படவேண்டும்.2015--16 தேசிய குடும்ப மற்றும் சுகாதார ஆய்வானது, 'இந்தியாவில் சராசரியாக 85.7 சதவிகிதத்தினர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். 28
சதவீதம் பெண்களும், 12 சதவீதம் ஆண்களும் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். 24 சதவீதம் பெண்களும், 74 சதவீதம் ஆண்களும் ஏதேனும் ஒரு வேலைவாய்ப்பைப் பெற்றவர்களாக உள்ளனர். இந்தியாவில் உள்ள பத்தில் 6 வீடுகளில் சுத்தமான குடிநீருக்கு போதிய முக்கியத்துவம் தருவதில்லை.

அதிலும் கிராமப்புறங்களில் 71 சதவீதம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 47 சதவீதம் வீடுகளும் சுத்தமான குடிநீருக்குப் போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை அல்லது கிடைப்பதில்லை. 16 சதவீதத்தினர் மட்டுமே பொதுக் குழாய்கள் வழியாகச் சுத்தமான குடிநீர் பெறுகின்றனர்'
என்கிறது. இந்தியாவின் மற்ற பல மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் வறுமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது உலகவங்கி.

ஒரு சமுதாயம்

ஒவ்வொரு நாடும் தன் மக்களின் சம உரிமையை மதித்து, அவர்களுக்கு சம வாய்ப்பை அளித்தால் சமூகநீதி நிலைநாட்டப்படும். அவ்வாறு சமூகநீதி நிலைநாட்டப்படும்போதுதான் 'அனைவரும் ஒரு சமுதாயம்' என்ற ஐ.நா.வின் இலக்கை அனைத்து நாடுகளும் அனைத்து மக்களும் அடைவது சாத்தியமாகும். வறுமையற்ற இந்தியாவைக் கட்டியெழுப்பத் தடையாக இருக்கும் சமூகத் தீமைகளை வேரறுத்தல் அவசியம். அடித்தட்டில் இருக்கிற மக்களை கைதுாக்கி விட சமூக நீதி பார்வை அவசியம். சமூக நீதியில்லாமல் சம நீதி சாத்தியமில்லை.

--ப. திருமலை
பத்திரிகையாளர்