முதுநிலை மருத்துவப் படிப்புகள் ஏப்.1 முதல் கலந்தாய்வு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முன்னதாக, அதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 31-ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.

இதுதொடர்பான அறிவிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஒற்றைச் சாளர முறையின் கீழ் கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படும். அதன்படி ஏப்.1-ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதலில் கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து ஏப்.5-ஆம் தேதி வரை பொதுக் கலந்தாய்வு நடைபெறும். மே 1-முதல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 124 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் (2019-20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள்  1,758-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாட்டிலேயே அதிக மருத்துவ மேற்படிப்பு இடங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.