வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10 அறிவித்தது.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பரப்புரையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு சில முக்கிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

1. மக்களவை, பேரவை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை அவசியம் என ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

2. ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதி அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தால், அதை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அந்த வாக்காளர் பெயர் குறிப்பிட்ட வாக்குசாவடி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

3. புகைப்பட வாக்காளர் சீட்டை மட்டுமே இனிமேல் வாக்களிப்பதற்கான தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்வதில்லை என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

4. ஆதார், ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி - அஞ்சலக கணக்கு புத்தகம், பான் கார்டு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்காளர்கள் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

11 ஆவணங்களின் விவரம்

1. பாஸ்போர்ட்
2. ஓட்டுநர் உரிமம்
3. மத்திய/மாநில/ அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை
4. வங்கி/தபால் அலுவலகம் அளித்த புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்
5. பான் கார்டு
6. தேசிய மக்கள்தொகை பதிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்கார்டு
7. MNREGA என்னும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறிதியளிப்புச் சட்டம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை
8. மத்திய தொழிலாளர் அமைச்சகம் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட்கார்டு
9. புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
10. எம்.பி/எம்.எல்.ஏ/எம்.எல்.சி-க்களுக்கு அரசு வழங்கும் அடையாள அட்டை
11. ஆதார் அட்டை