'நீட்' தேர்வில் ஒரு வினாவிற்கு ஒரு நிமிட நேரம்தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'நீட்' குறித்து சென்னை ஸ்மார்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனர் கே.கே.ஆனந்த் பேசியதாவது:

இத்தேர்வில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. திட்டமிட்டு படித்தால் வெற்றி பெறலாம்.இத்தேர்வில் பயாலஜி - 90, வேதியியல் -45, இயற்பியல் -45 வினாக்கள் என மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு ஒரு நிமிடத்தில் விடையளிக்கும் வகையில் நேரம் ஒதுக்கப்படும்.

இந்தாண்டு 60 வினாக்கள் வரை எளிதாக கேட்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் 240 மதிப்பெண் குறைந்தபட்சமாக பெற்று விடலாம்.  இந்தாண்டு 425 மதிப்பெண் பெற்றால் அரசு ஒதுக்கீட்டில் மெடிக்கல் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது, 300 மதிப்பெண் வரை பெற்றால் தனியார் கல்லுாரிகளில் கிடைக்கும், பயாலஜியில் ஹூமன் பிசியாலஜி, ஜெனிட்டிக்ஸ், சுற்றுச்சூழல், பிளான்ட் பிசியாலஜி போன்ற பகுதிகளில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படும்.

இதுபோல் வேதியியல், இயற்பியலிலும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்து முழுமையாக படிக்க வேண்டும். படிப்பதை எழுதிப் பார்க்க வேண்டும். அதிகமாக மாதிரி தேர்வு எழுதி பழகிக்கொள்ள வேண்டும். ஆடை தேர்வு உட்பட நீட் தேர்வுக்கு செல்லும் போது விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நெகட்டிவ் மதிப்பெண் உள்ளதால் தெரியாத வினாக்களை எழுத வேண்டாம். 

எளிமையாக கல்வி கடன் பெற'கல்விக் கடன்' குறித்து ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வணங்காமுடி பேசியதாவது:

வங்கி கடன் குறித்த அடிப்படை விஷயங்களை முதலில் தெரிந்துகொண்டால் கடன் பெறுவதில் கஷ்டம் இருக்காது. உரிய நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் பெறலாம். அனைத்து வகை யு.ஜி., பி.ஜி., மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கும் கடன் பெறலாம். படிக்கும் கல்லுாரி உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். தற்போது வித்யாலட்சுமி போர்ட்டலில் ஆன்லைன் மூலம் மட்டுமே கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.  அதில் ஆதார், பான் எண், கல்லுாரி சான்று, வருமான சான்று, ஜாதி சான்று உட்பட தேவைப்படும் அனைத்து ஆவணங்களை நாம் சமர்ப்பிக்க வேண்டும்.

நீட் தேர்ச்சி பெற்று அரசு ஒதுக்கீட்டிற்கு ஆண்டிற்கு 4 லட்சம் ரூபாயும், தனியார் கல்லுாரி ஒதுக்கீட்டிற்கு 12 லட்சம் ரூபாயும் கடன் பெறலாம். முன்கூட்டியே வங்கிக்கு சென்று பெற்றோர்- மாணவர் பெயரில் ஜாயின்ட் அக்கவுண்ட் துவங்க வேண்டும்.

திட்டமிடுதல், தேவையான ஆவணங்கள் சமர்ப்பித்தல், சரியான வங்கிகளை உரிய அதிகாரிகளை அணுகுதல் ஆகியவற்றால் எளிதில் வங்கிக் கடன் பெறலாம்.வெளிநாட்டில் படிக்கும் டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் படிப்பிற்கும் வங்கி கடன் வசதி உண்டு.

உள்நாட்டில் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய், வெளி நாட்டில் படிக்கும் படிப்புகளுக்கு அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். உள்நாட்டில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற படிப்புகளுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கூட கடன் பெறலாம். பெற்ற கடனை திருப்பி செலுத்துவது மிக முக்கியம்.

பரிசு பெற்ற மாணவர்கள்காலை கருத்தரங்கில் கேள்விகளுக்கு பதில் அளித்த மதுரை மாணவி இலக்கியா டேப்லெட் பரிசு பெற்றார். மாணவர்கள் அகமது அலி, பாலசந்தர், சண்முகபிரியன், காவியா, ஜோயிலின் மரியா வாட்ச் பரிசு பெற்றனர்.