அரசு பள்ளிகளில் கணினி வசதிகள் இல்லாததால் பயோமெட்ரிக் திட்டம் செயல்பாட்டில் சிக்கல்!

அரசுப் பள்ளிகளில் முறையான கணினி வசதிகள் இல்லாததால் பயோ மெட்ரிக் திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாக தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும்ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைந்த தொடுவுணர் கருவிமூலம் வருகைப்பதிவு (பயோமெட்ரிக் திட்டம்) முறை அமல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு மே 30-ல் தமிழக அரசு அறிவித்தது.இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் 3,688 உயர்நிலை, 4,040 மேல்நிலை என மொத்தம் 7,728 பள்ளிகளில் ரூ.15.30 கோடியில் பயோமெட்ரிக் முறை கடந்த ஜனவரியில் அமல் செய்யப்பட்டது.இந்தத் திட்டம் படிப்படியாக மற்ற பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. இந்நிலையில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில்கணினி வசதிகள் இல்லாததால் பயோமெட்ரிக் கருவி செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூறும்போது, “தமிழகம் முழுவதும் 7,728 அரசு மற்றும் அரசுஉதவி பெறும் உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு பள்ளிக்கு தலா 2 வருகைப்பதிவு கருவிகள் வழங்கப்படும் எனகூறப்பட்டது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளுக்கு ஒரு கருவியே வழங்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் கருவிபள்ளியில் உள்ள கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.இதற்கான பிரத்யேக மென்பொருள் மூலம் வட்டார வளமையம், மாவட்ட கல்வி மற்றும்முதன்மைக் கல்வி அலுவலகங்களுடன் அந்த கருவி இணைப்பில்இருக்கும். இதன்மூலம் வருகைப்பதிவை கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே பயோமெட்ரிக் கருவியின் மென்பொருள் உள்ளிட்ட அதன் செயல்பாடுகள் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வி அலுவலகங்கள், அரசு உதவி மற்றும் நகரப்புற பள்ளிகளில் அத்தகைய தொழில்நுட்பங்களை தகவமைத்து செயல்படும் கணினிகள் இருப்பதால் அங்கு பயோமெட்ரிக் கருவிகள் செயல்படுவதில் சிக்கல் இல்லை. ஆனால், பெரும்பாலான அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கணினி வசதிகளே இல்லை.

மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை கணினி பாடப்பிரிவுள்ள பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளன. அவையும் பழைய மென்பொருள் முறையில் இயங்குவதால் புதிய தொழில்நுட்பங்களை ஏற்று செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.மேலும், பள்ளிகளின் வேலை நேரத்தை நிர்ணயம் செய்வதிலும் குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறுபோதிய முன்தயாரிப்பு இல்லாமல் பயோமெட்ரிக் திட்டத்தைத் தொடங்கி அதை செயல்படுத்த அரசு அழுத்தம் தருகிறது. தினமும் ஆசிரியர்கள் வருகைப்பதிவை செய்து முடிப்பதே பெரிய சாதனையாகிவிட்டது.கல்வித்துறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும், நிலைமையை எப்படியாவது சமாளியுங்கள் எனகூறிவிடுகின்றனர்.

வேறு வழியின்றி சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கணினியை வாங்கி வைத்துள்ளனர். எனவே, பயோமெட்ரிக் திட்டத்தை முறையாக செயல்படுத்த எல்லா பள்ளிகளுக்கும் நவீன வசதிகளுடன் கூடிய தலா ஒரு கணினியை வழங்க அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் திட்டம் தோல்வியடையும்’’ என்றனர்.