தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகளில், வாயில் கதவுகளை மூடி வைக்க தடை

தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகளில், வாயில் கதவுகளை மூடி வைக்க கூடாது' என, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தேர்வுகள் ஏற்கனவே துவங்கி விட்டன. வரும், 14ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு துவங்க உள்ளது.தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதுதவிர, மாவட்ட வாரியாக, 23 அதிகாரிகள் உடைய, உயர் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுஉள்ளன. இந்த அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில், திடீர் சோதனை நடத்த, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுகளின் போது, தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகளின் வாயில் கதவுகள் பூட்டப்படுவதால், வெளியில் இருந்து செல்லும் பறக்கும் படையினர், உடனடியாகதேர்வறைக்குள் செல்ல முடியாது. கதவு திறக்கப்படும் வரை, காத்திருக்க வேண்டியுள்ளது. இது, முறைகேடுகளுக்கு வழிக்கும் என, குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, தேர்வு மையங்களின் வாயில் கதவுகளை மூடக்கூடாது என, தலைமை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில், ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு இருப்பதால், கதவுகளை முழுவதுமாக மூடாமல், அதிகாரிகளின் பறக்கும் படை எப்போதும் நுழையும் வகையில் வைத்திருக்க வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அன்பளிப்புக்கு தடைபொது தேர்வுகளில், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும், உண்டு, உறைவிட தனியார், 'ரெசிடென்ஷியல்' பள்ளி மாணவர்கள், அதிகமதிப்பெண் எடுப்பது வழக்கம். இந்த பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில், ஏற்கனவே, பொது தேர்வில், முறைகேடுகள் கண்டு பிடிக்கப் பட்டதால், கண்காணிப்பை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல, தனியார், 'ரெசிடென்ஷியல்' பள்ளிகள் வழங்கும் உணவு, போக்குவரத்துவசதி மற்றும் அன்பளிப்புகளை, தேர்வு பணி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஏற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.