முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஊக்க மதிப்பெண்கள்: புதிய வரையறைகள் வெளியீடு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஊக்க மதிப்பெண்கள் குறித்த வரையறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்தெந்தப் பகுதிகளில் சேவையாற்றினால் எவ்வளவு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் பேரில் அந்த வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மொத்த இடங்களில் 50%  அகில இந்திய தொகுப்புக்காகவும், மீதமுள்ளவற்றில் பாதிஇடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு வந்தது.ஆனால், நீட் தேர்வு அறிமுகமான பிறகு அந்த நடைமுறையை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்தது. அதற்கு மாற்றாக, எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள்  ஊரக மற்றும் மலையகப் பகுதிகளில் சேவையாற்றினால், அவர்கள் முதுநிலைப் படிப்புகளில் சேரும்போது, நீட் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து  ஊக்க மதிப்பெண்கள் வழங்கலாம் என்று மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்தது.அதன்படி, ஊக்க மதிப்பெண்களுக்கான வரையறையை மருத்துவப் பணிகள் கழக இயக்குநர் உமாநாத் தலைமையிலான குழு வகுத்தது. ஆனால், அந்த வரையறைகள்தொலைதூரங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்குப் பாதகமாகவும், நகரங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சாதகமாகவும் இருப்பதாகக் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம், அந்த முறையை ரத்து செய்ததுடன், ஊக்க மதிப்பெண் தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்குமாறு உத்தரவிட்டது.அதன்படி, நீதிபதி செல்வம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.அக்குழு, இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை அரசிடம் அண்மையில் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் தற்போது ஊக்க மதிப்பெண் தொடர்பான  வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன.புதிய விதிகளின்படி, மிகவும் கடினமான சூழல் உள்ள மலையகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் இருந்து 10 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணாக வழங்கப்படும். கடினமான சமவெளிப் பகுதிகளில் பணியாற்றினால் 9 சதவீதமும், போக்குவரத்து வசதிகளே இல்லாத பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றினால் 8 சதவீதமும், கிராமப் புறங்களில் பணியாற்றினால் 5 சதவீதமும் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நகர்ப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு எந்த விதமான மதிப்பெண் சலுகையும் வழங்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் 4 வகையான பகுதிகளில் மொத்தம் 1,823 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 227 அரசு மருத்துவமனைகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.